உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

புதுவை சிறைசாலையில் ஜாமர் கருவி ஆய்வு- அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவு

Published On 2022-01-29 06:59 GMT   |   Update On 2022-01-29 06:59 GMT
கைதிகளிடம் செல்போன் நடமாட்டம் குறித்து புதுவை சிறைசாலையில் ஜாமர் கருவி ஆய்வு செய்ய அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி :

புதுவையில் நடைபெறும் பல குற்ற சம்பவங்களுக்கு மைய புள்ளியாக காலாப்பட்டு மத்திய சிறைச்சாலையில் உள்ள கைதிகள் திகழ்கிறார்கள்.

மத்திய சிறைச்சாலையில் உள்ள  சில தாதா கைதிகள் தங்களின் ஆதரவாளர்கள் மூலம் புதுவையில் ஆள் கடத்தல், மிரட்டல், மாமூல் வசூலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

கடந்த 10 ஆண்டுக்கு மேலாக மத்திய சிறையில் உள்ள தண்டனை கைதிகளின் உத்தரவுப்படி புதுவையில் ரவுடிகள் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

சிறை கைதிகளின் அட்டகாசம் அதிகரிக்கும்போது அதை ஒடுக்க அரசு நடவ டிக்கை எடுக்கும். அப்போது அமைதியாக இருந்து விட்டு அடுத்த சுற்றுக்கு கைதிகள் தயாராகிவிடுவர். 

சிறையில் உள்ள கைதிகளின் வெளியுலக தொடர்புக்கு செல்போன் முக்கிய காரணியாக உள்ளது. 

செல்போன் சிறைக்குள் செல்வதை தடுக்க முடியாததால் அரசு ஒரு கட்டத்தில் ஜாமர் கருவியை பொருத்தியது. 

இந்த ஜாமர் கருவியால் சிறையை சுற்றியுள்ள கிராமப்பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறையில் உள்ள கைதிகள் வழக்கம் போல வெளியே உள்ள தங்கள் ஆதரவு ரவுடிகளோடு விலை உயர்ந்த செல்போன்கள் மூலம் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். 

சமீபத்தில் வாணரப்பேட்டையில் நடந்த  பாம்ரவி மற்றும் அவரது நண்பர் அந்தோணி இரட்டை கொலை சிறையில் இருந்து வந்த உத்தரவின்பேரில் நடந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.  இப்போதும் தங்கு  தடையின்றி சிறைக்குள் செல்போன்கள் நடமாட்டம் இருந்து வருகிறது. 

சமீபத்தில் சிறையில் நடந்த குடியரசு தின விழா மேடையை அப்புறப்படுத்த வேன் சென்றது. அந்த வேனில் செல்போன்,  கஞ்சா, பீடிக்கட்டுகள் இருந்தது கண்டறியப்பட்டு டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

எந்த கைதிக்காக அனுப்பப்பட்டது என விசாரித்து அவரின் அறையில் சோதித்த போது அங்கிருந்தும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

சிறைசாலையில் எவ்வளவு சோதனைகள், தடைகள் விதித்தாலும் செல்போன் நடமாட்டத்துக்கு முற்றுப்புள்ளி ஏற்பட வில்லை. இதற்கு சிறை அதிகாரிகள் ஆதரவு கைதிகளுக்கு இருப்பதே காரணமாக உள்ளது. இதனால் கைதிகளோடு தொடர்புடைய வார்டன்கள், ஊழியர்களை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

கைதிகளுக்கு உதவும் வார்டன்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் எச்சரித்துள்ளார்.  

மேலும் அவர் கூறும்போது, சிறையில் உள்ள ஜாமர் கருவியை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளேன். குற்றசெயல்களில் ஈடுபடு வோருடன் தொடர்பில் உள்ள ஜெயில் ஊழியர்களை  ஆதாரத்துடன் பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவர்கள் பிடிபட்டால் மிக கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறியுள்ளார்.
Tags:    

Similar News