செய்திகள்
பள்ளி மாணவிகள்

புதுவையில் 1 முதல் 8 வரை இப்போதைக்கு பள்ளிகள் திறப்பு இல்லை

Published On 2021-11-12 03:15 GMT   |   Update On 2021-11-12 03:15 GMT
புதுவையில் 1 முதல் 8 வரை இப்போதைக்கு பள்ளிகள் திறப்பு இல்லை என்றும், 9 முதல் 12-ம் வகுப்பு வரை வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் ஆன்லைனில் வகுப்புகள் நடந்து வந்தன. இந்தநிலையில் தொற்று பாதிப்பு குறைந்ததையடுத்து முதல்கட்டமாக 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடந்து வந்தன.

இதையடுத்து தீபாவளி உள்ளிட்ட பண்டிகை விடுமுறைகள் முடிந்ததும் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை கடந்த வாரம் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் கனமழை காரணமாக கடந்த 8-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. இதனால் ஏற்கனவே அறிவித்திருந்தபடி இந்த வகுப்புகள் தொடங்குவதில் தாமதம் ஆனது. தற்போது இன்றும், நாளையும் (வெள்ளி, சனிக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே மீண்டும் பள்ளிகள் தொடங்குவது எப்போது? என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடுவிடம் கேட்டபோது, சமூக வலைதளத்தில் வைரலான தகவலை மறுத்தார்.

மேலும் அவர் கூறுகையில், இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வழக்கம்போல் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடியாக பாடங்கள் நடத்தப்படும்.

மழையின் காரணமாக 1 முதல் 8-ம் வகுப்பு வரை மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகள் திறக்கப்படுவது இப்போதைக்கு தள்ளி வைக்கப்படுகிறது. இந்த வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு எப்போதும் போல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும் என்றார்.


Tags:    

Similar News