செய்திகள்
பச்சைப் பசேல் என பசுமையாய் காட்சியளிக்கும் தேயிலைத் தோட்டங்களை காணலாம்

கொரோனா ஊரடங்கால் சிதைந்த வாழ்வாதாரம்- சுற்றுலா தலங்களை மூடியதால் ரூ.400 கோடி வருவாய் இழப்பு

Published On 2021-06-09 11:19 GMT   |   Update On 2021-06-09 11:19 GMT
கொரோனா வைரஸ் இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியதால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் சுற்றுலா இடங்கள் மூடப்பட்டன. கோவில்களும் திறக்கப்படவில்லை.
திரும்பி பார்க்கும் திசைகளில் எல்லாம், பச்சைப்பசேல் என்று காட்சி அளிக்கும் பல்வேறு இடங்களை தன்னகத்தே கொண்டது தேனி மாவட்டம். மனதை மயக்கும் இயற்கை வளம் கொண்ட சுற்றுலா இடங்களையும், வரலாற்று சிறப்புமிக்க ஆன்மிக தலங்களையும் ஒருசேர அமைய பெற்றிருப்பது தேனி மாவட்டத்தின் கூடுதல் சிறப்பு.

சுருளி அருவி, கும்பக்கரை அருவி, மேகமலை அருவி போன்ற இயற்கையாக உருவான சுற்றுலா தலங்களும், வைகை அணை, மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை, ஹைவேவிஸ், குரங்கணி, டாப்ஸ்டேஷன் போன்ற பசுமை போர்த்திய சுற்றுலா இடங்களும் தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளன.

அத்துடன் குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் கோவில், வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில், மாவூற்று வேலப்பர் கோவில், கம்பம் கம்பராயப் பெருமாள் கோவில், உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோவில், தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில் உள்பட பல்வேறு ஆன்மிக சுற்றுலா தலங்களும் இங்கு உள்ளன.

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், பல்வேறு சுற்றுலா தலங்களில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பச்சைப் பசேல் தேயிலை தோட்டங்களை மலைகளின் மீது போர்த்தியது போல் காட்சி அளிக்கும் ஹைவேவிஸ் மலைப்பகுதியிலும் வளர்ச்சி திட்டப் பணிகளை மேற்கொள்ள திட்டங்கள் தயாரிக்கப்பட்டு இருந்தன. இதுமட்டுமின்றி கேரள மாநிலம் மூணாறு, தேக்கடி, குமுளி போன்ற பகுதிகளுக்கும் தேனியை கடந்து தான் செல்ல வேண்டும். இதனால், கேரள மாநிலத்துக்கு செல்லும் சுற்றுலா பயணிகளும் தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு வந்து செல்வார்கள்.

தினமும் சராசரியாக 5 ஆயிரம் சுற்றுலா பயணிகள் தேனி மாவட்டத்துக்கு வந்து செல்வது வழக்கம். கோடை விடுமுறை காலங்களில் தினமும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.

கொரோனா வைரஸ் இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியதால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் சுற்றுலா இடங்கள் மூடப்பட்டன. கோவில்களும் திறக்கப்படவில்லை.

பின்னர் சில தளர்வுகளுடன் கோவில்கள் திறக்கப்பட்ட போதிலும், மீண்டும் கோவில்களுக்கு பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், மாவட்டத்தில் உள்ள ஆன்மிக சுற்றுலா தலங்களும், இயற்கை வளமிக்க சுற்றுலா தலங்களும் வெறிச்சோடி காணப்படுகின்றன.

சுற்றுலா பயணிகள் வருகையை நம்பியுள்ள தனியார் சுற்றுலா வாகன டிரைவர்கள், சுற்றுலா வழிகாட்டி நிறுவன ஊழியர்கள், தங்கும் விடுதி உரிமையாளர்கள், சுற்றுலா தலங்களில் கடைகள் நடத்துபவர்கள் என மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். வாழ்வாதாரம் சிதைக்கப்பட்ட நிலையில் பலரின் குடும்பத்தினர் வறுமையில் வாடுகின்றனர்.

இதுகுறித்து தேனி மாவட்ட சுற்றுலா வாகன உரிமையாளர்கள் சங்க செயலாளர் ரவிச்சந்திரனிடம் கேட்டபோது, "தேனி மாவட்டத்தில் சுற்றுலா வாகன ஓட்டுனர்கள், ஊழியர்கள் என சுமார் ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். சுற்றுலா இடங்களுக்கு அருகாமையில் 100-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன. அங்கு பணியாற்றுபவர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். மாவட்டத்தில் வாகன வாடகை, சுற்றுலா பயணிகள் உணவகங்களில் சாப்பிடுவது, தங்கும் விடுதிகளில் தங்குவது, சுற்றுலா இடங்களில் பொருட்கள் விற்பனை போன்றவற்றால் பலதரப்பு மக்களுக்கும் வருவாய் கிடைத்து வந்தது.

கொரோனாவால் சுற்றுலா தலங்கள் ஒரு ஆண்டுக்கும் மேலாக இயல்பு நிலையை இழந்துள்ளன. இதனால், மாவட்டத்தில் ரூ.300 கோடியில் இருந்து ரூ.400 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா இடங்களுக்கான கட்டண வசூல் மூலம் அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாயிலும் இழப்பு ஏற்பட்டுள்ளது" என்றார்.
Tags:    

Similar News