உலகம்
பெட்ரோல், டீசல்

பாகிஸ்தானில் டீசல் விலை ரூ.195 ஆக உயரும் அபாயம்

Published On 2022-04-16 03:03 GMT   |   Update On 2022-04-16 03:03 GMT
பாகிஸ்தானில் 15 நாட்களுக்கு ஒரு தடவை பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அடுத்த 15 நாட்களுக்கான விலை மாற்றத்தின்போது, ஷெபாஸ் ஷெரீப் அரசு எடுக்கும் முடிவை பொறுத்து இதுபற்றி தெரிய வரும்.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் 15 நாட்களுக்கு ஒரு தடவை பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினால், மக்கள் கொந்தளிப்பார்கள் என கருதி, முந்தைய இம்ரான்கான் அரசு, எண்ணெய் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கி வந்தது.

கொள்முதல் விலைக்கும், விற்பனை விலைக்கும் உள்ள வித்தியாசம் அடிப்படையில், டீசல் லிட்டருக்கு ரூ.41-ம், பெட்ரோலுக்கு ரூ.24-ம் மானியமாக கொடுத்து வந்தது. அதனால், தற்போது டீசல் விலை ரூ.144 ஆகவும், பெட்ரோல் விலை ரூ.149 ஆகவும் விற்கப்பட்டு வருகிறது.

புதிதாக பொறுப்பேற்றுள்ள ஷெபாஸ் ஷெரீப் அரசு, இந்த மானியம் வழங்குவதை நிறுத்தினால், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.51 உயர்த்தி, ரூ.195 ஆக விற்க வேண்டி இருக்கும் என்று எண்ணெய் மற்றும் எரிவாயு ஒழுங்குமுறை ஆணையம் கணக்கு போட்டுள்ளது. அதுபோல, பெட்ரோல் விலையை ரூ.22 உயர்த்தி, ரூ.171 ஆக விற்க வேண்டி இருக்கும் என்று கூறியுள்ளது.

வரிகளை சேர்த்தால், விலை உயர்வு இன்னும் அதிகரிக்கும். அடுத்த 15 நாட்களுக்கான விலை மாற்றத்தின்போது, ஷெபாஸ் ஷெரீப் அரசு எடுக்கும் முடிவை பொறுத்து இதுபற்றி தெரிய வரும். ஆனால், இப்போதுதான் பதவிக்கு வந்திருப்பதால், ஷெரீப் விலையை உயர்த்த மாட்டார் என்று எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறினார்.

Tags:    

Similar News