செய்திகள்
மம்தா பானர்ஜி

கூஜ்பெகரில் நடந்தது இனப்படுகொலை -மம்தா பானர்ஜி ஆவேசம்

Published On 2021-04-11 09:06 GMT   |   Update On 2021-04-11 09:06 GMT
சிஐஎஸ்எப் வீரர்கள், தொழிலக விவகாரங்களை கையாள மட்டுமே பயிற்சி பெற்றிருப்பதாகவும், மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த பயிற்சி பெற்றிருக்கவில்லை என்றும் மம்தா பானர்ஜி கூறினார்.
சிலிகுரி:

மேற்கு வங்காள மாநிலத்தில் நான்காம் கட்ட தேர்தலின்போது, கூஜ்பெகர் மாவட்டம், சிடால்குச்சி தொகுதியில் உள்ள 126வது வாக்குச்சாவடியில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. மத்திய பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இது பாஜகவின் சதி என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி வருகிறார். துப்பாக்கி சூடு சம்பவத்தைத் தொடர்ந்து கூஜ்பெகர் மாவட்டத்திற்குள் அரசியல் கட்சி தலைவர்களி நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல்வர் மம்தா பானர்ஜி இன்று சிலிகுரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கூஜ்பெகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டது இனப்படுகொலை என்றும், மார்பு மற்றும் கழுத்தை குறிவைத்து சுடப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினார். சிஐஎஸ்எப் வீரர்கள், தொழிலக விவகாரங்களை கையாள மட்டுமே பயிற்சி பெற்றிருப்பதாகவும், மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த அவர்கள் பயிற்சி பெறவில்லை என்றும் கூறினார். 



மேலும், துப்பாக்கி சூட்டினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன், மம்தா பானர்ஜி வீடியோ கால் மூலம் பேசினார். அவர்களுக்கு ஆறுதல் கூறிய மம்தா, 14ம் தேதி நேரில் வந்து சந்திப்பதாக கூறினார்.

அதன்பின்னர் ஜல்பைகுரியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் மம்தா பேசியதாவது:-

நான் வங்கப் புலி. என்னை கூஜ் பெகருக்கு செல்ல விடாமல் தடுத்துவிட்டனர். அதனால் சிலிகுரியில் இருந்தபடி, வீடியோ கால் வாயிலாக அவர்களிடம் (துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் குடும்பங்கள்) பேசினேன். அவர்கள் (பிஜேபி ஆளும் மத்திய அரசு) 4 கட்டங்களாக நடந்த தேர்தலிலும் தோல்வி அடைந்துவிட்டதை அறிவார்கள். எனவே இப்போது அவர்கள் துப்பாக்கிகளைப் பயன்படுத்துகிறார்கள். இந்த தோட்டாக்களுக்கு வாக்குகள் மூலமாக நாங்கள் பழிதீர்ப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News