செய்திகள்
ஜவுளிக்கடையில் தீ எரிந்ததை படத்தில் காணலாம்

சிவகாசி பஸ் நிலையம் அருகே ஜவுளிக்கடையில் தீ விபத்து- ஏராளமான ஆடைகள் நாசம்

Published On 2020-10-14 02:16 GMT   |   Update On 2020-10-14 02:16 GMT
சிவகாசி பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஜவுளிக்கடையில் நேற்று மதியம் தீ விபத்து ஏற்பட்டு, அங்கு விற்பனைக்கு இருந்த ஏராளமான ஆடைகள் எரிந்து நாசமாயின.
சிவகாசி:

சிவகாசி பஸ் நிலையம் அருகே மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் திருச்சி முத்தாநத்தம் பகுதியை சேர்ந்த ஷேக்முகமது என்பவர் ஜவுளிக்கடை நடத்தி வந்தார்.

கட்டிடம் ஏதும் இல்லாமல் காலி இடத்தில் கட்டைகளாலும், தகரத்தாலும் அமைக்கப்பட்ட மேற்கூரையில் இந்த ஜவுளிக்கடை இயங்கி வந்தது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு துணிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணிக்கு கடையில் இருந்து திடீரென கரும்புகை கிளம்பியது. உடனே கடையில் இருந்த தொழிலாளர்கள், வாடிக்கையாளர்கள் வெளியே ஓடி வந்தனர். அதற்குள் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

தகவல் அறிந்ததும் சிவகாசி தீயணைப்பு நிலைய அலுவலர் பாலமுருகன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் தீ மேலும் பரவியது. அதன் பின்னர் மேலும் ஒரு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியினை தொடர்ந்தனர்.

30 நிமிட போராட்டத்துக்கு பின்னர் தீ கட்டுப்படுத்தப்பட்டது. அதற்குள் தீயணைப்பு வாகனத்தில் இருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. உடனே நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைக்கும் பணி தொடர்ந்தது. 1 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஏராளமான ஆடைகள் எரிந்து நாசமாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தீவிபத்துக்கான காரணம் குறித்து சிவகாசி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News