செய்திகள்
ஸ்மித்

மாலத்தீவில் தங்கியிருந்த ஆஸ்திரேலிய வீரர்கள் சொந்த நாடு சென்றடைந்தனர்

Published On 2021-05-17 11:03 GMT   |   Update On 2021-05-17 11:03 GMT
ஐ.பி.எல். போட்டி ரத்து செய்யப்பட்டு, மாலத்தீவு சென்றடைந்த ஆஸ்திரேலிய வீரர்கள் இன்று சொந்த நாடு திரும்பினார்கள்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென பயோ-பபுள் வெடித்து வீரர்கள் கொரோனா தொற்றால் தாக்கப்பட்டனர். இதனால் கடந்த 4-ந்தேதி ஐ.பி.எல். போட்டிகள் உடனடியாக ரத்து செய்யப்பட்டு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து வெளிநாட்டு வீரர்கள் உடனடியாக சொந்த நாடு திரும்ப விரும்பினர். பிசிசிஐ-யும் இதற்கான ஏற்பாடுகளை செய்தது. தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் வீரர்கள் சொந்த நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்படவில்லை.

ஆஸ்திரேலியா தனது எல்லைகளை மூடி இந்தியாவில் இருந்து விமானங்கள் வர மே 15-ந்தேதி வரை தடைவிதித்தது. இதனால் ஆஸ்திரேலியா வீரர்கள் மாலத்தீவு சென்று அங்கிருந்து ஆஸ்திரேலியா செல்ல முடிவு செய்தனர். கடந்த 6-ந்தேதி மாலத்தீவு சென்ற அவர்கள் சொந்த நாடு திரும்ப முடியாமல் மாலத்தீவில் உள்ள ஓட்டல்களில் தங்கியிருந்தனர்.

நேற்று முன்தினத்துடன் ஆஸ்திரேலியாவின் தடைக்காலம் முடிவுக்கு வந்தது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு விமானங்கள் சென்றன. இந்த நிலையில் இன்று ஐபிஎல் போட்டியில் விளையாடிய வீரர்கள், வர்ணனையாளர்கள், பயிற்சியாளர்கள் என 38 பேர் இன்று சிட்னி சென்றடைந்தனர். அங்கு இரண்டு வாரம் தனிமைப்படுத்திக் கொண்டு வீட்டிற்கு செல்வார்கள்.

ஆஸ்திரேலிய வீரர்களை விரைவாகவும், பாதுகாப்பாகவும் ஆஸ்திரேலியா அனுப்பி வைத்ததற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு சிஇஓ நிக் ஹாக்லே பிசிசிஐ-க்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News