செய்திகள்
கொலை

ஆதம்பாக்கத்தில் ரவுடி கொலை- காதலியே எமனாக மாறினார்

Published On 2021-10-17 09:41 GMT   |   Update On 2021-10-17 09:41 GMT
ஆதம்பாக்கத்தில் ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

சென்னை மேடவாக்கம் சந்தோஷ்புரத்தில் வசித்து வந்த ரவுடி நாகூர் மீரான் கடந்த 14-ந் தேதி வெட்டிக் கொல்லப்பட்டார்.

சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் 3-வது தெருவில் தனது காதலி லோகேஸ்வரி வீட்டிக்கு சென்றிருந்த போது அவரது எதிரிகள் வீடு புகுந்து நாகூர் மீரானை சரமாரியாக கத்தியால் குத்திக் கொன்றனர்.

இந்த கொலை தொடர்பாக ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். நாகூர் மீரானை கொலை செய்ததாக ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் 3-வது தெருவை சேர்ந்த சீனிவாசன், சாமுவேல் மற்றும் காணிக்கை ராஜ், விமல்ராஜ், பிரபாகரன், கார்த்திக் ஆகியோர் உடனடியாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 4 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ராபின், பவுல் ராஜ் மற்றும் நாகூர் மீரானின் காதலி லோகேஸ்வரி ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதன் மூலம் நாகூர் மீரான் கொலை வழக்கில் 9 பேர் கைதாகி உள்ளனர்.

போலீஸ் விசாரணையில் கொலையாளிகள் நாகூர் மீரானின் காதலியான லோகேஸ்வரியின் வீட்டுக்கு நாகூர் மீரானை வரவழைத்து திட்டமிட்டு தீர்த்துக் கட்டி இருப்பது தெரிய வந்துள்ளது.

நாகூர் மீரானுக்கு அவரது காதலி லோகேஸ்வரியே எமனாக மாறி இருப்பதும், அவரே தகவல் கொடுத்து நாகூர் மீரானின் எதிரிகளுடன் கை கோர்த்து திட்டமிட்டு தீர்த்துக் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரவுடி நாகூர் மீரானுக்கும், ராபின் என்பவருக்கும் ஏற்கனவே இருந்த முன் விரோதம் காரணமாக காதலியை தங்கள் பக்கம் இழுத்து கொலை சதியில் ஈடுபட்டுள்ளனர்.

நாகூர் மீரானின் எதிரான ராபின் மீது ஒரு கொலை வழக்கு, 3 கொலை முயற்சி வழக்கு உட்பட 15 வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

நாகூர் மீரான் மீதும் 2 கொலை வழக்குகள், 3 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 15 வழக்குகள் உள்ளன.

Tags:    

Similar News