தமிழ்நாடு
கைது

எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தியிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல்- 3 பேர் கைது

Published On 2022-01-16 04:16 GMT   |   Update On 2022-01-16 04:16 GMT
முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சம்பந்தியிடம் பணம் கேட்டு மிரட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சென்னிமலை ரோடு, உழவன் நகரில் வசித்து வருபவர் சுப்பிரமணியம் (வயது 62). இவருடைய மகளை முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மகன் திருமணம் செய்துள்ளார். இதனால் சுப்பிரமணியம், எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி ஆவார். சுப்பிரமணியத்துக்கு கடந்த டிசம்பர் மாதம் 26-ந் தேதியில் இருந்து ஒரு செல்போன் எண்ணில் இருந்து தொடர்ந்து அழைப்பு வந்து கொண்டிருந்தது.

அதில் பேசிய நபர்கள், நாங்கள் கேட்ட பணத்தை கொடுங்கள். இல்லையென்றால் உங்களை கொலை செய்யவும் தயங்க மாட்டோம் என்று கூறி மிரட்டல் விடுத்து வந்தனர்.

இதுகுறித்து சுப்பிரமணியம் பெருந்துறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த குறிப்பிட்ட செல்போன் அழைப்பு எங்கிருந்து வந்தது? என்பது குறித்து சிக்னல் மூலம் கண்காணித்து வந்தனர்.அதில் அந்த செல்போன் அழைப்புகள் சத்தியமங்கலம் பகுதியில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் சத்தியமங்கலம் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ‘அவர்கள் சத்தியமங்கலம் உள்ள பண்ணாரி ரோட்டை சேர்ந்த பால்ராஜ் (60), சந்திரன் (48), சீனிவாசன் (41) உள்பட 5 பேர் என்பதும், அவர்கள் அனைவரும் சேர்ந்து செல்போனில் சுப்பிரமணியத்திடம் பணம் கேட்டு பேசி, கொலை மிரட்டல் விடுத்து வந்ததும்,’ தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து பால்ராஜ், சந்திரன், சீனிவாசன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News