உள்ளூர் செய்திகள்
அடுக்கி வைக்கப்பட்டுள்ள உரமூட்டைகள்.

ஆறுமுகநேரி வேளாண் கூட்டுறவு சங்கத்திற்கு 40 டன் யூரியா ஒதுக்கீடு

Published On 2022-01-11 09:58 GMT   |   Update On 2022-01-11 09:58 GMT
ஆறுமுகநேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் உரத்தட்டுப்பாடு நிலவுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பற்றாக்குறையை போக்க 40 டன் யூரியா ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி பகுதியில் 3 குளங்களின் மூலம் சுமார் 1000 ஏக்கரில் நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. வயல்களில் யூரியா உரம் இடப்பட வேண்டிய தருணத்தில் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டது.

ஆறுமுகநேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலம் ஏற்கனவே இருப்பில் இருந்த குறைந்த அளவு யூரியா மூடைகள் உடனடியாக விற்று போய் விட்ட நிலையில் இப்பகுதி விவசாயிகள் வெளியூர்களுக்கு சென்று உரம் வாங்க அலைந்தனர். 

அங்கு கூடுதல் விலை, செயற்கையான தட்டுப்பாடு ஆகிய காரணங்களால் மேலும் பிரச்சினைகள் தொடர்ந்தன.

இந்த நிலையில் இதுபற்றிய தகவல்களுடன், ‘ஆறுமுக நேரியில் உரத் தட்டுப்பாட்டை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?’ என்ற தலைப்பில் கடந்த 27-ந்தேதி ‘மாலை மலர்’ இதழில் செய்தி வெளியானது. 

இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மற்றும் வேளாண் துறை ஏற்பாட்டில் உடனடியாக ஆறுமுகநேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு 15 டன் யூரியா உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து 2-வது கட்டமாக மேலும் 10டன் யூரியா உரமும் தற்போது கூடுதலாக 15டன் உரமும் வந்துள்ளது. இதுவரையில் மொத்தம் 40டன் உர மூடைகள் கிடைத்துள்ளன.

இடைத்தரகர்கள் எவரின் குறுக்கீடும் இன்றி ஆதார் கார்டு மூலம் விவசாயி ஒருவருக்கு இரண்டு மூடை யூரியா உரம் தங்கு தடையின்றி கிடைத்து வருகிறது. இதனால் ஆறுமுகநேரி பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இங்கு இருந்த உரம் தட்டுப்பாடு நிலைமையை போக்க நடவடிக்கை எடுத்த அதிகாரிகளை அவர்கள் பாராட்டுகின்றனர். 

மேலும் ஆறுமுகநேரி பகுதி விவசாயத்திற்கு இன்னும் 10டன் யூரியா உரம் ஒதுக்கீடு செய்வதன் மூலம் தாமதமாக விவசாய பணிகளை தொடங்கிய விவசாயிகளுக்கு அது உதவும் என்றும், அதே போல் 10 டன் காம்ப்ளக்ஸ் உரமும் இப்பகுதி விவசாயத்திற்கு தேவைப்படுகிறது என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
Tags:    

Similar News