செய்திகள்

2ஜி வழக்கில் மேல்முறையீடு செய்ய சி.பி.ஐ.க்கு சட்ட அமைச்சகம் அனுமதி

Published On 2018-01-20 17:48 GMT   |   Update On 2018-01-20 17:48 GMT
2ஜி வழக்கின் தீர்ப்பு தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய சி.பி.ஐ.க்கு, மத்திய சட்ட அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. #2Gcase #CBIAppeal #Lawministry
புதுடெல்லி:

2ஜி ஊழல் புகார்கள் தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த  வழக்கை டெல்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி விசாரித்து வந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை 2017ஆம் ஆண்டு தொடக்கத்தில் முடிவடைந்தது. இருப்பினும் தீர்ப்பு தேதி அறிவிப்பு தொடர்ந்து ஆறு முறை ஒத்திவைக்கப்பட்டது.

நாட்டின் மிகப்பெரிய ஊழல் வழக்காக கருதப்படும் இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த டிசம்பர் 21-ம் தேதி அறிவிக்கப்பட்டது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முக்கிய குற்றவாளிகளான முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட 14 பேரையும் விடுதலை செய்து நீதிபதி ஒ.பி.ஷைனி உத்தரவிட்டார். குற்றம்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டதால் அனைவரும் விடுதலை செய்யப்படுவதாகவும் ஒ.பி.ஷைனி தெரிவித்தார்.

இதனை எதிர்த்து சிபிஐ சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, மேல்முறையீடு செய்ய மத்திய சட்ட அமைச்சகத்திடம் சி.பி.ஐ. அனுமதி கோரியது.

இந்நிலையில், 2ஜி வழக்கின் தீர்ப்பு தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மத்திய சட்ட அமைச்சகம் இன்று சி.பி.ஐ.க்கு அனுமதி அளித்துள்ளது. இதனால், அடுத்த சில நாட்களில் 2ஜி வழக்கில் சி.பி.ஐ. சார்பில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளது உறுதியாகியுள்ளது.

2ஜி ஊழல் குற்றச்சாட்டு பற்றி முன்னாள் அமைச்சர் ஆ.ராசா எழுதிய ஒரு ஆங்கில நூல் (2G Saga Unfolds) இன்று மாலை வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. #2Gcase #CBIAppeal #Lawministry #tamilnews
Tags:    

Similar News