செய்திகள்
யுவராஜ் சிங் கவுதம் காம்பிர்

பிசிசிஐ 12-ம் நம்பர் ஜெர்ஸிக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்- கவுதம் காம்பிர்

Published On 2019-09-22 14:23 GMT   |   Update On 2019-09-22 14:51 GMT
யுவராஜ் சிங்கிற்கு பெருமை சேர்க்கும் விதமாக பிசிசிஐ 12-ம் நம்பர் ஜெர்ஸிக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என கம்பிர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். குறிப்பாக ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக ஸ்டூவட் பிராட் பந்தில் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசி சாதனைப் படைத்தார்.

டோனி தலைமையில் இந்திய அணி 2007-ல் டி20 உலகக்கோப்பையையும், 2011-ல் உலகக்கோப்பையையும் வெல்ல இவரது ஆட்டம் மிகமிக முக்கியமானதாகும். மேலும் வெளிநாட்டு மண்ணில் இந்தியா சிறப்பாக விளையாட யுவராஜ் சிங் முக்கிய காரணமாக இருந்தார்.

இந்திய கிரிக்கெட்டிற்கு மிகப்பெரிய அளவில் தனது பங்களிப்பை அளித்த யுவராஜ் சிங், 12-ம் நம்பர் பொறித்த ஜெர்ஸி அணிந்து விளையாடினார். அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில்  12-ம் எண் ஜெர்ஸிக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்று கவுதம் காம்பிர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கவுதம் காம்பிர் கூறுகையில் ‘‘செப்டம்பர் மாதம் என்றாலே எனக்கு சிறப்பான உணர்வை கொடுக்கக்கூடிய மாதம். இந்த மாதம்தான் 2007-ல் டி20 உலகக்கோப்பையை நாங்கள் வென்றோம். நம்பமுடியாத வகையில் விளையாடிய யுவராஜ் சிங் முக்கிய பங்காற்றினார்.



2007 மற்றும் 2011 உலகக்கோப்பையில் அவருடைய ஆட்டம் சிறப்பு. அதனால், அவர் அணிந்திருந்த 12-ம் எண் ஜெர்ஸிக்கு பிசிசிஐ ஓய்வு அளிக்க வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். ஒரு வாழ்நாள் சிறப்பு கிரிக்கெட்டருக்கு இது மிகச்சிறந்த மரியாதையாக இருக்கும்’’ என்றார்.

இரண்டு உலகக்கோப்பை தொடரிலும் கவுதம் காம்பிரின் ஆட்டம் சிறப்பாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News