செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

சொத்துக்கள் பறிமுதலை எதிர்த்து விஜய் மல்லையா வழக்கு - விசாரணை ஒத்திவைப்பு

Published On 2019-07-29 08:03 GMT   |   Update On 2019-07-29 08:03 GMT
கிங்பி‌ஷர் நிறுவனத்தின் சொத்துக்களை தவிர்த்து வேறு எந்த சொத்துக்களையும் பறிமுதல் செய்ய இடைக்கால தடை விதிக்க விஜய் மல்லையா தொடர்ந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
புதுடெல்லி:

இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்தாமல் தொழில் அதிபர் மல்லையா இங்கிலாந்துக்கு தப்பி ஓடிவிட்டார்.

இதுதொடர்பாக சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்ட சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.



இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்துள்ள மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அவரை நாடு கடத்தக்கோரும் வழக்கு இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே மல்லையாவின் சொத்துக்கள் மற்றும் உறவினர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கு தடை விதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மல்லையா மனு தாக்கல் செய்தார்.

நிதி மோசடி குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் கிங்பி‌ஷர் நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துக்களை தவிர்த்து வேறு எந்த சொத்துக்களையும் பறிமுதல் செய்யக்கூடாது. இது தொடர்பான நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என தனது மனுவில் விஜய் மல்லையா தெரிவித்திருந்தார்.

இவ்வழக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மல்லையா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எப்.எஸ்.நாரிமன், ஏற்கனவே இவ்விவகாரம் தொடர்பாக இங்கு நிலுவையில் இருக்கும் பழைய வழக்குடன் இந்த வழக்கையும் இணைத்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதைத்தொடர்து, இவ்வழக்கின் மறுவிசாரணை ஆகஸ்ட் 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Tags:    

Similar News