செய்திகள்
தடுப்பூசி

குமரி மாவட்டத்தில் நாளை 510 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்

Published On 2021-09-25 10:55 GMT   |   Update On 2021-09-25 10:55 GMT
குமரி மாவட்டத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.
நாகர்கோவில்:

தமிழகம் முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த கோவாக்சின்,கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்படுகிறது. குமரி மாவட்டத்திலும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.

குமரி மாவட்டத்தில் இதுவரை 13 ஆயிரத்து 970 கர்ப்பிணிகள், 12 ஆயிரத்து 942 பாலூட்டும் தாய்மார்கள், 52 ஆயிரத்து 378 இதய நோயாளிகள் என மொத்தம் 9லட்சத்து 7 ஆயிரத்து 536 பேருக்கு முதலாது டோஸ் தடுப்பூசியும், 2 லட்சத்து 36 ஆயிரத்து 188 பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். ஏற்கனவே குமரி மாவட்டத்தில் இரண்டு முறை மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது. முதல் முறை நடந்த மெகா தடுப்பூசி முகாமில் 68ஆயிரம் பேருக்கும், இரண்டாவது மெகா தடுப்பூசி முகாமில் 28 ஆயிரம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் இன்னும் ஏராளமானோர் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர்.

அவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வசதியாக நாளை(26-ந்தேதி) 3-வது மெகா தடுப்பூசி முகாமை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 9 ஒன்றியங்களிலும் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 510 மையங்களில் தடுப்பூசி முகாம்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை நடக்கும் மெகா தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வசதியாக உள்ளாட்சி பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் ஏற்கனவே நேற்று 44ஆயிரம் டோஸ் தடுப்பூசி வந்த நிலையில், இன்று காலை மேலும் 55 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசிகள் அனைத்தும் நாளை நடைபெற உள்ள மெகா தடுப்பூசி முகாம்கள் மூலமாக பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிறது.

தடுப்பூசி முகாமில் அனைத்து பொதுமக்களும் உடனடியாக அருகில் உள்ள மையங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Tags:    

Similar News