செய்திகள்
பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் இல்லாத ஆண்டாக மாறிய 2020

Published On 2020-11-23 14:41 GMT   |   Update On 2020-11-23 14:44 GMT
பிரதமர் நரேந்திரமோடி 2020-ம் ஆண்டு இதுவரை எந்த ஒரு வெளிநாட்டிற்கும் பயணம் மேற்கொள்ளவில்லை.
புதுடெல்லி:

இந்திய பிரதமராக நரேந்திரமோடி 2014-ம் ஆண்டு பதவியேற்றார். 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றிபெற்றதையடுத்து நரேந்திரமோடி 2-வது முறையாக தொடர்ந்து பிரதமர் பதவி வகித்து வருகிறார்.

இதற்கிடையில், 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்து நரேந்திரமோடி பல்வேறு நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் பல வெளிநாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொண்டுள்ளார்.

பிரதமர் அலுவலகத்தின் இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி பிரதமர் மோடி, 2014-ம் ஆண்டு முதல் இதுவரை 96 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். 

2014-ல் 8 நாடுகள், 2015-ல் 23 நாடுகள், 2016-ல் 17 நாடுகள், 2017-லில் 14 நாடுகள், 2018-ல் 20 நாடுகள், 2019-ல் 14 நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்திற்காக 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவாகியுள்ளது.

இந்நிலையில் 2020-ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கியதால் அனைத்து நாடுகளுக்குமான விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. 

அதன் காரணமாக பிரதமர் மோடி எந்த நாட்டிற்கும் பயணம் மேற்கொள்ளவில்லை. இதன் மூலம் 2020-ஆம் ஆண்டு பிரதமருக்கு வெளிநாடு பயணம் இல்லாத ஆண்டாக மாறியுள்ளது.

2020 -ஆம் ஆண்டு நவம்பர் 22 வரை பிரதமர் மோடி ஒரு சர்வதேச பயணத்தை கூட மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் மோடி பிரேசில் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் பின் அவர் எந்த ஒரு வெளிநாட்டிற்கும் பயணம் மேற்கொள்ளவில்லை.
Tags:    

Similar News