ஆன்மிகம்
கோவில் தோற்றம்

வேண்டிய வரம் தரும் வேளம் மகா கணபதி கோவில்

Published On 2019-07-09 03:59 GMT   |   Update On 2019-07-09 03:59 GMT
கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம், மய்யில் (வேளம்) என்ற இடத்தில் மகாகணபதி கோவில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம், மய்யில் (வேளம்) என்ற இடத்தில் மகாகணபதி கோவில் உள்ளது. இத்தல இறைவனுக்கு யானைத் தந்தங்களைப் போன்ற தங்கக் கொம்புகளைச் சமர்ப்பித்து வழிபட்டால், அவர் வேண்டியதை உடனடியாக நிறைவேற்றித் தருவார் என்கிற நம்பிக்கை இங்கு வழிபடும் பக்தர்களிடம் நிறைந்திருக்கிறது.

தல வரலாறு :

பரசுராமர், கேரளத்தில் 108 எனும் எண்ணிக்கையில் சிவாலயங்கள், வைணவ ஆலயங்கள் மற்றும் தேவி ஆலயங்களை நிறுவினார். அதோடு அவற்றைச் சிறந்த முறையில் பராமரிப்பதற்காக பல அந்தணர் குடும்பங்களையும் அங்கு குடியேற்றினார். கண்ணூர் மாவட்டத்தில் உள்ள முக்கியமான சில இடங்களிலும் பல அந்தணர் குடும்பங்கள் குடியேறியிருந்தன.

இந்தப் பகுதியில் வசித்து வந்த அந்தணர்கள் அனைவரும், தளிப்பிரம்பா என்ற இடத்தில் அமைந்த ராஜராஜேஸ்வரர் கோவிலில் இருக்கும் இறைவனையே தங்கள் முதற்கடவுளாக நினைத்து வழிபட்டனர். அவர்களிடையே வேதங்கள், சடங்குகள் தொடர்பாக, ஏதாவது ஐயங்கள், கருத்து வேறுபாடுகள் ஏற்படும் போது, அவர்களுக்குள்ளாகவே வாதிட்டு, சிறந்ததொரு முடிவுக்கு வருவது என்கிற வழக்கத்தையும் அவர்கள் மரபு வழியாகப் பின்பற்றி வந்தனர்.

தளிப்பிரம்பா ராஜராஜேஸ்வரர் ஆலய வழிபாட்டு உரிமை, இப்பகுதியில் குடியிருந்த அனைவருக்கும் பொதுவானதாக இருந்த போதிலும், தளிப்பிரம்பாவில் வசித்த அந்தணர்கள் மட்டும் அந்த ஆலயத்தின் மீது அதிக அளவில் உரிமை கொண்டாடினர். அதனடிப்படையில், கோவிலின் ஆலயமணியைத் தளிப்பிரம்பா அந்தணர்களில் ஒருவரே அடித்து ஒலியெழுப்ப வேண்டும் என்ற வழிமுறையும் கடைப் பிடிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் அருகில் உள்ள வேளம் கிராமத்தைச் சேர்ந்த சில அந்தணர்கள், தளிப்பிரம்பா கோவிலுக்கு வந்தனர். அவர்களில் ஒருவர் நுழைவு வாசலில் இருந்த ஆலயமணியைப் பக்தியுடன் அடித்து ஒலி எழுப்பினார். அதனையறிந்த தளிப்பிரம்பா அந்தணர்கள், அவரைக் கோவிலுக்குள் நுழையக்கூடாது என்று தெரிவித்ததுடன், அவரை வலுக்கட்டாயமாகக் கோவிலை விட்டு வெளியேற்றவும் செய்தனர்.

கோவிலில் இருந்து வெளியேற்றப்பட்டதால் வேதனை அடைந்த அந்த அந்தணர், தான் குடியிருக்கும் வேளம் ஊரிலும் தளிப்பிரம்பா ஆலயத்தைப் போன்றதொரு ஒரு ஆலயத்தைக் கட்ட முடிவு செய்தார். வேளத்தில் இருந்த பழமையான வைத்தியநாதர் ஆலயத்தின் வடக்குப் பகுதியில், தளிப்பிரம்பாவில் இருக்கும் ஆலயம் போன்றதொரு புதிய ஆலயத்தைக் கட்டுவித்து, அந்த ஆலயத்தின் கருவறையில் ராஜராஜேஸ்வரர் எனும் பெயரிலான சிவலிங்கம் ஒன்றை நிறுவும் பணிகளையும் தொடங்கினார்.

அதனையறிந்த தளிப்பிரம்பா அந்தணர்கள், ஆலயப் பணிக்கு பல்வேறு இடையூறுகளைச் செய்தனர். அதனைக் கண்டு மனம் வருந்திய அந்த அந்தணர், கோவிலின் தெற்குப் பகுதியில் அமைந்திருந்த விநாயகப் பெருமான் சன்னிதியில் கலசாபிஷேகம் செய்து வழிபட்டார். அதன் பின்னர், இடையூறு இன்றி கோவில் பணிகள் நிறைவடைந்தது. வைத்தியநாத சுவாமி கோவில், புதியதாக கட்டப்பட்ட ராஜராஜேஸ்வரர் கோவில் என இரு சிவாலயங்கள் இருந்தாலும், தடைகளை நீக்கியருளிய விநாயகர் ஆலயமே அங்கு சிறப்பு பெற்று விளங்குகிறது. இந்த ஆலயம் வேளம் மகாகணபதி கோவில் என்று அழைக்கப்படுகிறது.

ஆலய அமைப்பு :
 
கோவில் வளாகத்தின் மேற்குப் பகுதியில் வைத்தியநாதசுவாமி ஆலயக் கருவறை, அதற்கு வடக்கே ராஜராஜேஸ்வரர் ஆலயக் கருவறை என்று இரண்டு கருவறைகளுடன் இரு சிவாலயங்கள் அமைந்திருக்கின்றன. இவற்றுள் வைத்தியநாத சுவாமி கருவறை சிறியதாகவும், ராஜராஜேஸ்வரர் கருவறை பெரியதாகவும் இருக்கின்றன. ஒரே நடையில் இரு சிவாலயங்கள் அமைந்திருப்பது இங்கு மட்டுமே என்பது ஆலயத்தின் முக்கியச் சிறப்பு.

ராஜராஜேஸ்வரர் கோவிலின் தெற்குப் பகுதியில் அமைந்திருக்கும் சன்னிதியில், மகாகணபதி தெற்கு நோக்கிப் பார்த்த நிலையில் வீற்றிருக்கிறார். இவரைப் பக்தர்கள் தட்சிணாமூர்த்தியின் வடிவமாகக் கருதி வழிபடுகின்றனர். வைத்தியநாத சுவாமி ஆலயத்தின் மேற்குப்புறம் பார்வதி தேவி, மேற்கு நோக்கிப் பார்த்த நிலையில், அன்னபூர்ணா தேவி வடிவில் இருக்கிறாள். வடமேற்கு மூலையில் கிருஷ்ணர் சன்னிதி ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது. கோவிலுக்கு வெளியே அழகிய தீர்த்தக் குளம் உள்ளது.

இக்கோவிலில் திருமணத்தடை நீக்கத்திற்கு வேண்டிக் கொள்பவர்கள், திருமணம் உறுதிக்காக நடைபெறும் உறுதிப்படுத்தும் நிகழ்வுக்கு முன்பாக, இக்கோவிலுக்கு வந்து கணபதிக்கு நன்றி செலுத்தும் விதமாக, 21 கதலிப் பழங்கள் கோர்க்கப்பட்ட மாலையை சமர்ப்பித்து வழிபடுகின்றனர்.
 
தங்க கொம்பு சமர்ப்பித்து வழிபாடு :

மகாகணபதி கோவில் வழிபாட்டில், கணபதி வேள்வி, சொர்ணக் கொம்பு, வட்டலப் பாயசம் படைத்தல், மலர் சமர்ப்பித்தல், நெய் விளக்கேற்றுதல் போன்றவை சிறப்புடையதாக இருக்கிறது. இத்தல இறைவனுக்கு தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளியிலான யானைத் தந்தங்கள் போன்ற சிறிய கொம்புகளைச் சமர்ப்பித்து வழிபடும் வித்தியாசமான வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. பக்தர்கள் தங்கள் வசதிக்கேற்ப, ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று என்று ஒற்றை இலக்க வரிசையில் இந்த தங்கக் கொம்புகளை வாங்கிக் கருவறை வாசலில் வைத்து வேண்டுகின்றனர். அங்கிருக்கும் அர்ச்சகர் அதனை எடுத்துக் கணபதியின் பாதங்களில் சமர்ப்பித்துப் பூஜை செய்கிறார். கோவில் அலுவலகத்தில் இந்த தங்கக் கொம்புகளைப் பணம் செலுத்திப் பெற்றுக் கொள்ள முடியும். சொர்ணக் கொம்பு சமர்ப்பித்து, வேண்டுதல் நிறைவேறியவர்கள் கணபதிக்கு நன்றி செலுத்தும் விதமாகப் பாயசம் படைத்து வழிபடுகின்றனர்.

அமைவிடம் :

கேரள மாநிலம், கண்ணூரில் இருந்து 21 கிலோமீட்டர், தளிப்பிரம்பா எனுமிடத்திலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மய்யில் (வேளம்) எனுமிடத்தில் அமைந்திருக்கும் இத்தலத்திற்குச் செல்லக் கண்ணூரிலிருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.

தேனி மு.சுப்பிரமணி
Tags:    

Similar News