லைஃப்ஸ்டைல்
உச்சந்தலையில் அரிப்பு

உச்சந்தலையில் அரிப்பும்- தீர்க்கும் வழிமுறையும்

Published On 2020-06-19 04:01 GMT   |   Update On 2020-06-19 04:01 GMT
கோடை காலத்தில் நிறைய பேருக்கு உச்சந்தலையில் நமைச்சல், அரிப்பு பிரச்சினை தலைதூக்கும். இதற்கு வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு தீர்வு காண்பது எப்படி என்று பார்க்கலாம்.
கோடை காலத்தில் நிறைய பேருக்கு உச்சந்தலையில் நமைச்சல், அரிப்பு பிரச்சினை தலைதூக்கும். தலைமுடியில் வியர்வையும், எண்ணெய்யும் படிந்திருப்பதே அதற்கு காரணமாக இருக்கும். ஷாம்பு போட்டு குளித்தால் சிலருக்கு சரியாகிவிடும். நமைச்சல் அதிகமாக இருந்தால் அழுக்கு படர்ந்துகொண்டிருப்பது, பேன் தொல்லை, ஒவ்வாமை, உச்சந்தலை சுத்தமாக பராமரிக்கப்படாவிட்டால் தோன்றும் தொற்று, ஷாம்பு ஒத்துக்கொள்ளாதது போன்றவை காரணமாக இருக்கலாம்.

பொடுகு தொல்லைதான் உச்சந்தலையில் நமைச்சல் ஏற்படுவதற்கு பொதுவான காரணமாகும். அதனால் உச்சந்தலையில் பூஞ்சை, பாக்டீரியா போன்ற தொற்றுகள் உருவாகும். அதன் காரணமாக அரிப்பு பிரச்சினை உண்டாகும். உச்சந்தலையில் போதுமான ஈரப்பதத்தன்மை இல்லாவிட்டாலும் அரிப்பு ஏற்படலாம். தலைமுடியை சுத்தமாக பராமரிக்காதது, தலைமுடிக்கு பயன்படுத்தும் பொருட்கள் ஒத்துக்கொள்ளாதது, தலையில் அதிகபடியாக வியர்ப்பது போன்ற காரணங்களும் நமைச்சலை ஏற்படுத்தும். சில சமயங்களில் மன அழுத்தமும், உணவு பழக்கமும் கூட பிரச்சினையை ஏற்படுத்திவிடும்.

பெரும்பாலானோர் நமைச்சல் பிரச்சினைக்கு தீர்வாக எலுமிச்சை சாறுவைத்தான் பயன்படுத்துவார்கள். உச்சந்தலை உள்பட கூந்தல் முழுவதும் எலுமிச்சை சாறை கொண்டு அழுத்தி தேய்த்துவிட்டு சில நிமிடங்கள் கழித்து குளித்துவிடலாம். அரிப்பு நீங்குவதோடு முடியும் வலிமையாகும். கற்றாழை ஜெல்லையும் பயன்படுத்தலாம். அதனை தலையில் நன்றாக தடவிவிட்டு கால் மணி நேரம் கழித்து நீரில் அலசலாம். லாவண்டர் எண்ணெய், யூகலிப்டஸ் எண்ணெய், சாமந்தி எண்ணெய் போன்றவையும் அரிப்புக்கு சிறந்த நிவாரணம் தரும். இந்த எண்ணெய்களை சிறிதளவு தண்ணீரில் கலந்து தலையில் தேய்த்து வரலாம்.

ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய்யும் பயன்படுத்தலாம். ஆலிவ் மற்றும் பாதாம் எண்ணெய் கலவை பொடுகுக்கு சிறந்த தீர்வு தரும். தூங்க செல்வதற்கு முன்பு ஐந்தாறு முறை தலை சீவுவது உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். அரிப்பு தொந்தரவு வராமலும் தடுக்கும். உணவு பழக்கமும் கூந்தல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வைட்டமின் பி, சி, துத்தநாகம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது நோய்த்தொற்றுகள் மற்றும் ஒவ்வாமை பிரச்சினைகளை தவிர்க்க உதவும். உச்சந்தலையில் அரிப்பு தொல்லை இருந்தால் கீரை, சாலட், பயறு மற்றும் காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். 
Tags:    

Similar News