ஆன்மிகம்
கோபுரம் மின்னொளியில் ஜொலிப்பதையும், யாகசாலை பூஜை நடந்ததையும் படத்தில் காணலாம்.

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம்

Published On 2021-01-25 02:45 GMT   |   Update On 2021-01-25 02:45 GMT
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது. விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி. ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
மதுரை அருகே சோழவந்தானில் உள்ள பிரசித்திபெற்ற ஜெனகை மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை 9.05மணி அளவில் நடைபெறுகிறது. விழாவையொட்டி கடந்த சனிக்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. அன்று காலை சிறுவர், சிறுமிகள் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர்.

மாலை 5 மணியில் இருந்து முதல் கால யாக பூஜையும், நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜையும் நடைபெற்றது. இரவு மூன்றாம் கால யாக பூஜைநடந்தது. இன்று (திங்கட்கிழமை) அதிகாலை நான்காம் கால யாக பூஜையுடன் தீபாராதனை நடக்கிறது .

காலை 8.30மணி அளவில் சிவாச்சாரியார்கள் புனிதநீர் குடங்களை மேளதாளத்துடன் எடுத்து கோவிலை வலம் வந்து 9.05 மணி அளவில் ராஜகோபுரம் விமானம், மூர்த்திக்கு அபிஷேகம் செய்து மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதைத்தொடர் விநாயகர், முருகன், ஜெனகை மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தீபாராதனை நடைபெற்று பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் கே. ராஜூ, சேவூர் ராமச்சந்திரன், தேனி எம்.பி. ரவீந்திரநாத், மாணிக்கம் எம்.எல்.ஏ. உள்பட இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளும், திருப்பணி குழுவினரும் கலந்து கொள்கின்றனர்.

கும்பாபிஷேக விழாவையொட்டி சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்த ஆரோக்கியராஜ் தலைமையில் போலீசாரும, தீயணைப்பு நிலைய அலுவலர் ஸ்ரீனிவாசன் தலைமையில் தீயணைப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பேரூராட்சி சார்பாக நவீன கழிப்பறை வசதி ஏற்பாடு, கூடுதலாக தெருவிளக்கு, குடிநீர் வசதி, சுகாதார வசதி செய்துள்ளனர். நகர கூட்டுறவு வங்கி சார்பாக பக்தர்களுக்கு இனிப்பு, லேமினேசன், ஜெனகை மாரியம்மன் திரு உருவப்படம், குளிர்பானங்களும் வழங்குகின்றனர். எம்.வி.எம். குழுமம் சார்பாக நிறுவனர் மணிமுத்தையா பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்துள்ளார். மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக விழிப்புணர்வு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு உள்ளது. நேற்று இரவு இருந்தே பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் சோழவந்தானில் குவிந்துள்ளனர்.
Tags:    

Similar News