செய்திகள்
விருதுநகர் கலெக்டர் கண்ணன்

26,275 விவசாயிகளுக்கு ரூ.193.95 கோடி பயிர் கடன் தள்ளுபடி - கலெக்டர் தகவல்

Published On 2021-02-20 13:24 GMT   |   Update On 2021-02-20 13:24 GMT
26,275 விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.193.95 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக விருதுநகர் கலெக்டர் கண்ணன் கூறினார்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் கண்ணன் தலைமையி்ல் நடைபெற்றது.

இதில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை கூறினர். விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து தொடர்புடைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் கண்ணன் வலியுறுத்தினார்.

பின்னர் கலெக்டர் கண்ணன் கூறியதாவது:-

காரியாபட்டி வட்டாரத்தில் வேப்பங்குளம் மற்றும் முடுக்கன்குளம் கிராமங்களில் செயல்திட்ட விளக்கத்திடல்களில் பிரியாணி அரிசியாக பயன்படும் வைகை-1 நெல் ரகம் பயிரிடப்பட்டு நல்ல மகசூல் தருவதால் மாநில விதைப்பண்ணையில் அதிகமாக விதை நெல்லை உற்பத்தி செய்து மாவட்ட விவசாயிகளுக்கு அடுத்த பருவத்தில் வைகை-1 ரக விதை நெல் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அனைத்து பயிர்களுக்குமான பயிர் காப்பீடு அந்தந்த வருடத்தில் உடனுக்குடன் கிடைத்திட வழிவகை செய்யப்படும் எனவும் கூறினார்.

விருதுநகர் மாவட்டத்தில் இயற்கை இடர்பாடுகளான நிவர் மற்றும் புரெவி புயல் மற்றும் வடகிழக்கு பருவதொடர்மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் பெற்று வழங்கிடும் பொருட்டு சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு ரூ.17.66 கோடி நிவாரணத்தொகை பெற கருத்துரு அனுப்பப்பட்டு விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது.

கூட்டுறவு சங்கங்களில் பயிர்கடன் தள்ளுபடியாக 26,275 விவசாயிகள் பயன்பெறும் வண்ணம் ரூ.193.95 கோடி அரசு தள்ளுபடி செய்துள்ளது. நடப்பு வருடத்தில் 19 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நேரடி நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது.

வனவிலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தினை தடுக்கும் வகையில் வட்ட அளவிலான துறை அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதால் சேத விவரத்தினை அலுவலர்களுக்கு தெரிவிக்கும் பட்சத்தில் வேளாண்மை தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை மற்றும் வனத்துறை அலுவலர்கள் கூட்டாய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வழிவகை செயல்படுத்தப்படும்.

வேளாண் பொறியியல் துறை மூலம் சோலார் மின்வேலி அமைத்தல், பண்ணைக்குட்டைகள் அமைத்தல் மற்றும் வேளாண் கருவிகள் வாங்குவதற்கு விவசாயிகள் விண்ணப்பித்து முன்னுரிமை அடிப்படையில் பயன்பெறலாம்.

மேலும், வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி விளக்கப்பட்டு உலர்களம் சேமிப்பு கிடங்கள் அமைப்பதற்கு அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் கொள்முதல் செய்யப்படும் விவசாயிகளிடமிருந்து செஸ் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. வியாபாரிகளிடமிருந்து மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன், கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம், வேளாண்மை இணை இயக்குனர் உத்தண்டராமன், இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) திலிப்குமார், இணை இயக்குனர் (கால்நடை பராமரிப்பு) அருணாச்சலக்கனி மற்றும் அதிகாரிகள் கலந்து ெகாண்டனர்.
Tags:    

Similar News