செய்திகள்
கொரோனா வைரஸ்

3-வது அலை பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாது: மத்திய சுகாதார அமைச்சக உயர் அதிகாரி தகவல்

Published On 2021-06-24 03:11 GMT   |   Update On 2021-06-24 03:11 GMT
கட்டுப்பாடுகளை ஒழுங்காக பின்பற்றினால், கொரோனாவின் 3-வது அலை பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாது என்று மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால் கூறினார்.
புதுடெல்லி: 

மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால், டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தொற்று, இதுவரையில் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 2.2 சதவீதத்தினரை பாதித்துள்ளது. இது இன்னும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் 97 சதவீத மக்களை பாதுகாப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாம் பாதுகாப்பு அம்சங்களை கை விட்டு விட முடியாது. கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துவது முக்கியம்.

நாம் கட்டுப்படுத்துவதுடன், கொரோனா கால கட்டுப்பாடுகளை பின்பற்றினால் 3-வது அலை வந்தாலும், அது சுகாதார அமைப்பைக் கட்டுப்படுத்தக்கூடிய அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.

கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தில் எதிர்கொள்ளும் சவாலில் ஒன்று, தடுப்பூசி தொடர்பான தயக்கம்தான்.

கொரோனா தடுப்பூசி பற்றிய கட்டுக்கதைகள், வதந்திகள், சமூக ஊடகங்களில் வெளியான தவறான தகவல்கள் காரணமாக பல பயனாளிகள் குறிப்பாக கிராமப்புறங்களிலும், பழங்குடியினர் பகுதிகளிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தவறி உள்ளனர்.

தடுப்பூசிகள் பற்றிய கட்டுக்கதைகளை உடைத்து, கொரோனா கால பொருத்தமான நடத்தையின் பங்கு பற்றி சமூகத்துக்கு நினைவுபடுத்துவதும் முக்கியமானது. இது பரவல் சங்கிலியை உடைப்பதில் முக்கியமானது என்றார்.

இரு வெவ்வேறு கொரோனா தடுப்பூசி டோஸ்களை போட்டுக்கொள்வது பற்றிய கேள்விக்கு சுகாதார அமைச்சக மூத்த அதிகாரியான வீணா தவான் பதில் அளித்தார். இதுபற்றி அவர் கூறும்போது, “இது பற்றிய முழுமையான பகுப்பாய்வு செய்யப்படவில்லை. எனவே இரு வெவ்வேறு தடுப்பூசிகளை போடத்தேவையில்லை. ஒரே தடுப்பூசியின் இரு டோஸ்களைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டார்.



தடுப்பூசிக்கு பிந்தைய பாதகம் பற்றி அவர் கூறுகையில், “தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னர் 30 நிமிடங்கள் முக்கியம். எனவேதான் மக்கள் கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர். முதல் 30 நிமிடங்களில் தீவிரமான அல்லது கடுமையான பக்க விளைவுகள் காணப்படுகின்றன” என்றார்.

“கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடுவது பற்றி கொரோனா தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக்குழு பரிந்துரைத்துள்ளது. மற்ற நாடுகளில் இது நடந்து வருகிறது. அதற்கான வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும். வீடு வீடாக சென்று தடுப்பூசி போடுவதில் சில தடைகள் உள்ளன, ஒவ்வொரு குப்பியும் 4 மணி நேரத்திற்குள் பயன்படுத்தப்பட வேண்டும். இது கடினமானது. பயனாளிகளை கண்காணிப்பதும் கடினம். எனவேதான் இதைச் செய்யவில்லை. அதே நேரத்தில் வீடுகளுக்கு அருகே தடுப்பூசி வசதி தொடங்கப்பட்டுள்ளது’’ எனவும் கூறினார்.
Tags:    

Similar News