செய்திகள்
புகையிலை

13-15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு புகையிலை பழக்கம்- கணக்கெடுப்பில் தகவல்

Published On 2021-11-25 02:58 GMT   |   Update On 2021-11-25 02:58 GMT
59.1 சதவீதம் பேர் திறந்தவெளி பொது இடங்களில் புகையிலையை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
புதுச்சேரி:

புதுச்சேரி மாநில புகையிலை கட்டுப்பாட்டு மையம், தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டம் அரசு மார்பு நோய் நிலையம், ஜிப்மர் நோய் தடுப்பு மற்றும் சமூக மருத்துவ துறை சார்பில் உலக இளைஞர்கள் புகையிலை பயன்பாட்டு தகவல் இதழ் வெளியீட்டு நிகழ்ச்சி மற்றும் புகையிலை நிறுவனங்களில் குறுக்கீடு தொடர்பான பயிலரங்கு அக்கார்டு ஓட்டலில் நடந்தது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இளைஞர் புகையிலை கணக்கெடுப்பு தகவல் இதழை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார். இதில் சுகாதாரத்துறை செயலாளர் உதயகுமார், இயக்குனர் ஸ்ரீராமுலு, மாநில புகையிலை கட்டுப்பாட்டு அதிகாரி மற்றும் மாநில காசநோய் கட்டுப்பாட்டு அதிகாரி கோவிந்தராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



உலக இளைஞர்கள் புகையிலை பயன்பாட்டு கணக்கெடுப்பில் கிடைத்த தகவலின்படி, ‘புதுவையில் 13-15 வயதிற்குப்பட்ட மாணவர்களில் 4.3 சதவீதத்தினர் புகைக்கும் அல்லது மெல்லும் வகையிலான புகையிலையில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வருகின்றனர். இது தேசிய சராசரியான 8.5 சதவீதத்தை ஒப்பிடும்போது பாதியளவு குறைவானது.

புகையிலை இல்லா வழிகாட்டு நெறிமுறைகளை 63.6 சதவீதம் பள்ளிகள் பின்பற்றுகின்றன. 45.5 சதவீதம் பள்ளிகள் புகையிலை இல்லா பள்ளிக்கூடம் என்ற தகவல் பலகை வைக்க வேண்டும் என்ற நெறிமுறை பற்றி அறிந்துள்ளன. 52.6 சதவீதம் பேர் மூடப்பட்ட பொது இடங்களில் புகையிலையை தடை செய்ய வேண்டும் என்றும், 59.1 சதவீதம் பேர் திறந்தவெளி பொது இடங்களில் புகையிலையை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்’.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags:    

Similar News