செய்திகள்
கீரை

காய்கறிகள் விலை உயர்வு: ஓட்டல்களில் கூட்டு, பொரியலுக்கு பதிலாக கீரை-பயிறு வகைகள்

Published On 2021-11-25 04:58 GMT   |   Update On 2021-11-25 04:58 GMT
நெல்லை, தென்காசி மாவட்டத்திலுள்ள பெரும்பாலான உணவகங்களில் காய்கறிகள் பயன்பாடு வெகுவாக குறைக்கப்பட்டு உள்ளது.
செங்கோட்டை:

தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளா உள்பட பல மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக பருவமழை காரணமாக விளைநிலங்கள் முழுவதும் வெள்ளக்காடாய் காட்சி அளிக்கிறது.

விளைநிலங்களில் வெள்ளம் தேங்கியிருப்பதால் காய்கறி பயிரிட்ட விவசாயிகளுக்கு பயிர்கள் முழுவதுமாக நாசமடைந்துள்ளது.

தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, சேலம், ஈரோடு, திண்டுக்கல், நாகர்கோவில் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலுள்ள காய்கறி சந்தைகளுக்கு வர வேண்டிய காய்கறிகளின் வரத்து மிகவும் குறைந்துள்ளது.

இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் மிகவும் பிரபலமான சுரண்டை, பாவூர்சத்திரம் மார்க்கெட்டுக்கு வழக்கம் போல் வந்திறங்கும் காய்கறிகளின் வரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது ஐயப்ப சீசன் தொடங்கி பக்தர்கள் விரதம் இருந்து வருவதால் காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது. வரத்து குறைந்து தேவை அதிகரிப்பால் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்த வண்ணம் உள்ளது.

வழக்கமாக தமிழகத்தில் மழை காரணமாக காய்கறிகள் தட்டுப்பாடு ஏற்பட்டால் பிற மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும். ஆனால் தற்போது பெரும்பாலான மாநிலங்களில் பருவமழை காரணமாக பயிர்கள் நாசமடைந்துள்ளதால் அங்கிருந்து காய்கறிகள் வரத்து பெருமளவில் குறைந்துள்ளது.

விலை உயர்வு காரணமாக நடுத்தர குடும்பத்தினருக்கு காய்கறி வாங்குவது பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. விலை கடுமையாக உயர்ந்த காரணத்தினால் காய்கறி பொரியல் மற்றும் கூட்டு வகைகளை அதிகமாக வைத்திடும் சைவ ஓட்டல்கள் திணறி வருகின்றன.

தற்போது நெல்லை, தென்காசி மாவட்டத்திலுள்ள பெரும்பாலான உணவகங்களில் காய்கறிகள் பயன்பாடு வெகுவாக குறைக்கப்பட்டு உள்ளது. அதற்கு மாறாக மழைக்காலத்தில் அதிகளவில் கிடைத்திடும் கீரைகள் மற்றும் பயிறு வகைகள் அதிகளவில் பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.

இது தொடர்பாக காய்கறி வியாபாரி கூறும்போது, வரலாறு காணாத அளவிற்கு காய்கறிகளின் விலை உயர்ந்து காணப்படுகிறது. உள்ளூர் காய்கறிகளும், மலைப்பகுதிகளில் விளைந்திடும் காய்கறிகளும் மழையினால் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்தது.

இதுதொடர்பாக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு காய்கறி வரத்தை அதிகரித்து விலை உயர்வினை சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் நடுத்தர மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவர். மேலும் சிறிய ஓட்டல்களில் காய்கறி கொண்டு தயாரிக்கப்படும் கூட்டு, பொரியல் வகைகள் நிறுத்தப்பட்டு மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டிய நிலை உருவாகிவிடும். இதனால் அவர்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என்றார்.
Tags:    

Similar News