செய்திகள்
கோப்புபடம்

அம்மாபேட்டை அருகே சந்தனமரத்தை வெட்டி கடத்த முயன்ற 3 பேர் கைது

Published On 2020-10-16 14:15 GMT   |   Update On 2020-10-16 14:15 GMT
அம்மாபேட்டை அருகே சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்ற 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
அம்மாபேட்டை:

அம்மாபேட்டை அருகே குறிச்சி மலை கரட்டினையொட்டி உள்ள சமூக நல காடுகள் தோட்டத்தின் அருகில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இப்பகுதியில் உள்ள சந்தன மரங்களை சிலர் வெட்டுவதாக சென்னம்பட்டி வனச்சரகர் செங்கோட்டையனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் வனச்சரகர் செங்கோட்டையின் தலைமையிலான வனகுழுவினர் குறிச்சி பகுதிக்கு நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது அந்தப்பகுதியில் ஒரு சந்தன மரத்தை 3 பேர் வெட்டிக் கொண்டிருந்ததை பார்த்தனர். உடனே 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் 3 பேரும் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த பெரியசாமி (வயது 47), அவருடைய தம்பி சின்னசாமி (40) மற்றும் முருகன் (50) என்பதும், அவர்கள் 3 பேரும் சேர்ந்து சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்றதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 16 கிலோ எடையுள்ள சந்தன மர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் 3 பேரும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக இயக்குனர் நிஹார் ரஞ்சனிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர், கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் தலா ரூ.20 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.60 ஆயிரம் அபராதமாக விதித்தார்.
Tags:    

Similar News