உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

கோவை அருகே பார் சப்ளையர் கல்லால் தாக்கி கொலை

Published On 2022-04-15 10:57 GMT   |   Update On 2022-04-15 10:57 GMT
துடியலூர் போலீசார் அடிதடி வழக்கை கொலை வழக்காக மாற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை: 

ராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை அருகே உள்ள பாரதி நகரை சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவரது மகன் விக்னேஸ்வரன் (வயது21). இவர் கோவை துடியலூர் அம்பிகா நகரில் உள்ள டாஸ்மாக் பாரில் சப்ளையராக வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று இவரது கடைக்கு வெள்ளக்கிணறை சேர்ந்த பிரேனேஷ் (21). இடையர்பாளையத்தை சேர்ந்த உதயகுமார் (23) ஆகியோர் மது குடிக்க வந்தனர். அவர்கள் பாரில் சப்ளையராக இருந்த விக்னேஸ்வரனை அழைத்து உணவு வாங்கி சாப்பிட்டபடி மது குடித்தனர். 

போதை தலைக்கேறிய நிலையில் பிரனேஷ், உதயகுமார் ஆகியோர் உணவுக்கான பணத்தை கொடுக்காமல் வெளியே சென்றனர். இதனை பார்த்த விக்னேஸ்வரன் உணவுக்கு பணம் கொடுக்கும்படி கேட்டார். அவர்கள் பணம் கொடுக்க மறுத்து விட்டனர். 

இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பிரனேஷ், உதயகுமார் ஆகியோர் விக்னேஸ்வரனை தாக்கி கீழே தள்ளினர். பின்னர் அங்கு கிடந்த கல்லால் அவரது தலை மற்றும் வயிற்றில் தாக்கினர். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

அங்கு அவருக்கு  முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் அறைக்கு திரும்பினார். இது குறித்து துடியலூர் போலீசார் அடிதடி வழக்குபதிவு செய்து பார் சப்ளையரை தாக்கிய பிரனேஷ், உதயகுமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இந்தநிலையில் அறையில் இருந்த  விக்னேஸ்வரன் தொடர்ந்து வாந்தி எடுத்து கொண்டு இருந்தார். இதனையடுத்து அவரை அவரது உறவினர்கள் மற்றொரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் விக்னேஸ்வரன் பரிதாபமாக இறந்தார். 

இதனையடுத்து துடியலூர் போலீசார்  அடிதடி வழக்கை கொலை வழக்காக மாற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
Tags:    

Similar News