செய்திகள்
கோயம்பேடு பஸ் நிலையம் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடக்கும் காட்சி

இரவுநேர ஊரடங்கால் பஸ் போக்குவரத்து பாதிப்பு- அரசுக்கு தினமும் ரூ.15 கோடி இழப்பு

Published On 2021-04-22 02:45 GMT   |   Update On 2021-04-22 03:14 GMT
பஸ்சில் ஏறும் பயணிகள் முககவசம் கண்டிப்பாக அணிந்து வர வேண்டும் என்று பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருவதாக தமிழக போக்குவரத்து துறை செயலாளர் கூறினார்.
சென்னை:

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு பல்லவன் சாலையில் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.

இந்தப்பணியை தமிழக போக்குவரத்து துறை செயலாளர் சி.சமயமூர்த்தி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பணிமனைகளிலும் பணிபுரியும் 45 வயதை கடந்த அனைத்து டிரைவர், கண்டக்டர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி படிப்படியாக போடப்பட்டு வருகிறது.

டிரைவர் மற்றும் கண்டக்டருக்கு நோய் தொற்று ஏற்பட்டால் பஸ்சில் பயணிக்கும் பயணிகளுக்கும் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 45 வயதை கடந்த டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில் 25 ஆயிரத்து 459 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு 37 சதவீதத்தை எட்டி உள்ளோம்.



தடுப்பூசி போடும் பணியை படிப்படியாக தீவிரப்படுத்தி வருகிறோம். ஒன்று அல்லது இரண்டு வாரத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு விடும். பொதுசுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் அதற்கான ஏற்பாடுகள் செய்து தந்துள்ளனர்.

டிரைவர், கண்டக்டர்கள் விருப்பப்பட்டால் தடுப்பூசி போட்டு கொள்ளலாம். கண்டிப்பாக போட வேண்டும் என்று கூறவில்லை. சந்தேகம் இருப்பவர்கள் சோதனை செய்துவிட்டு தடுப்பூசி போட்டு கொள்ளலாம். காய்ச்சல் இருந்தால் கண்டிப்பாக பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 90 முதல் 95 சதவீதம் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

பஸ்சில் ஏறும் பயணிகள் கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கப்படுகிறது. அனைவருக்கும் வழங்க முடியாது. தனிநபர்களுக்கும் பொறுப்பு வேண்டும். முககவசம் கண்டிப்பாக அணிந்து வர வேண்டும் என்று பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. சில இடங்களில் டிரைவர், கண்டக்டருடன் தகராறும் சிலர் செய்கின்றனர்.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் 16 ஆயிரத்து 284 பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 2 ஆயிரத்து 790 பஸ்கள் இயக்ககப்பட்டு வருகிறது. அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 345 பஸ்கள் இயக்கப்பட்டன. அதில் குறைக்கப்பட்டு உள்ளது. 80 சதவீதம் பஸ்கள் இரவில் இயக்கப்பட வேண்டிய பஸ்கள் முன்னுரிமை அடிப்படையில் பகல் நேரங்களில் மாற்றி இயக்கப்படுகிறது. பணிமனையில் இருந்து புறப்படும் பஸ்களும் சுத்தம் செய்யப்பட்டு பயணிகள் சேவைக்கு பயன்படுத்தப்படுகிறது.

இரவுநேர ஊரடங்கால் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக போக்குவரத்து கழகங்களுக்கு சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.12 கோடி முதல் ரூ.15 கோடி வரை இழப்பு ஏற்பட்டு வருகிறது. நோய் தடுப்பை கட்டுப்படுத்துவதற்காக நின்று கொண்டு பயணிக்க கூடாது என்பதால் அலுவலக நேரங்களில் கூடுதலாக பஸ்கள் இயக்கப்படுகிறது. இரவு ஊரடங்கால் விரைவு போக்குவரத்து கழகம் தான் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது. பெரும்பாலான போக்குவரத்து கழகங்களில் இரவு 11 மணியுடன் சேவையை நிறைவு செய்துவிடுவார்கள் என்பதால் 10 சதவீதம் மட்டுமே பாதிப்பு இருக்கிறது.

அதனையும் தற்போது இரவு 9.30 மணிக்கு புறப்படும் வகையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பஸ் நிலையங்களிலும் நோய் பரவலை தடுப்பதற்காக விளம்பர பலகைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பகல் நேரங்களில் பயணிகள் கூட்டம் எவ்வளவு குறைந்து உள்ளது என்று ஓரிரு நாட்களுக்கு பிறகு தான் தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் கு.இளங்கோவன் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.
Tags:    

Similar News