செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கியது

Published On 2021-07-17 10:30 GMT   |   Update On 2021-07-17 10:30 GMT
தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
திருப்பூர்:

இந்தியா முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதியில் இருந்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் முன்கள பணியாளர்களான டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டது. இதன் பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்த பலரும் தயக்கம் காட்டி வந்தனர். ஆனால் கொரோனாவின் பாதிப்பு அதிகரிப்பு மற்றும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வின் காரணமாக தடுப்பூசி போட பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இதன் காரணமாக மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையும் ஏற்பட்டு வந்தது. இதனால் தொழில்நகரம் என்பதால் திருப்பூருக்கு கூடுதலாக தடுப்பூசி கேட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பூசி பெற்று வருகிறார்கள். இவ்வாறு வருகிற தடுப்பூசியும் மாவட்டம் மற்றும் மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு விரைவாக பிரித்து அனுப்பி வைக்கப்படுகிறது. தடுப்பூசியும் பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிறது.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை அனைத்து தரப்பினரையும் சேர்த்து 5 லட்சத்து 87 ஆயிரத்து 290 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 18 வயது முதல் 44 வயதுடையவர்கள் 2 லட்சத்து 83 ஆயிரத்து 381 பேர் அடங்குவார்கள். 45 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 1 லட்சத்து 88 ஆயிரத்து 212 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 1 லட்சத்து 15 ஆயிரத்து 697 பேர். 

இதுபோல் கோவிஷீல்டு செலுத்தியவர்கள் 5 லட்சத்து 3 ஆயிரத்து 445, கோவேக்சின் செலுத்தியவர்கள் 82 ஆயிரத்து 856 பேர். மேலும், ஆண்கள் 3 லட்சத்து 18 ஆயிரத்து 4 பேரும், பெண்கள் 2 லட்சத்து 69 ஆயிரத்து 201 பேரும் அடங்குவார்கள். இதுபோல் முதல் டோஸ் செலுத்தியவர்கள் 4 லட்சத்து 98 ஆயிரத்து 667 பேரும், 2&வது டோஸ் செலுத்தியவர்கள் 88 ஆயிரத்து 623 பேரும் மாவட்டத்தில் இருக்கிறார்கள். தடுப்பூசி தேவையான அளவு வந்து கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும். தடுப்பூசி கிடைக்காது என அச்சப்பட தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். 
Tags:    

Similar News