செய்திகள்
பேட்டரி வாகனத்துடன் பழங்குடியின பெண்கள்

ஈஷாவின் உதவியால் சுயதொழில் செய்து சொந்தக் காலில் நிற்கும் பழங்குடி பெண்கள்

Published On 2021-04-14 08:51 GMT   |   Update On 2021-04-14 08:51 GMT
பழங்குடியின பெண்களுக்கு ஈஷா சார்பில் ஆதியோகி அருகில் ஒரு பெட்டிக் கடையும், ஒரு பேட்டரி வண்டியும் இலவசமாக வழங்கப்பட்டது.
கோவை:

ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழும் மக்களுக்கு கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு என பல்வேறு வழிகளில் ஈஷா உதவி செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக, சமூக கட்டமைப்பில் மிகவும் அடிமட்டத்தில் இருக்கும் பழங்குடி மக்களின் வாழ்வாதார மேம்பாட்டில் ஈஷா கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, ஈஷாவுக்கு அருகே உள்ள தாணிகண்டி மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த 11 பழங்குடியின பெண்களை ஒன்றிணைத்து ‘செல்லமாரியம்மன் பழங்குடியினர் மகளிர் சுய உதவி குழு’ 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அவர்களுக்கென்று தனியாக, ஆதியோகி அருகில் ஒரு பெட்டி கடையும், ஒரு பேட்டரி வண்டியும் இலவசமாக வழங்கப்பட்டது.



சில நூறு ரூபாய் முதலீட்டில் தங்களது சுய தொழிலை தொடங்கிய அவர்கள் வெறும் மூன்றே ஆண்டுகளில் ரூ.64 லட்சம் வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளனர். அத்துடன் ரூ.23 லட்சம் லாபமும் ஈட்டியுள்ளனர். அதில் ரூ.6 லட்சம் முதலீட்டில் புதிதாக ஒரு பேட்டரி வண்டியையும் வாங்கியுள்ளனர். ஆதியோகியில் இருந்து சர்பவாசல் வரை பொதுமக்களை அழைத்து செல்வதற்காக இந்த வண்டியை பயன்படுத்துகின்றனர். 10 பேர் அமரும் திறன் கொண்ட அந்த வண்டியில் பயணிக்க ஒருவருக்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கின்றனர். அந்த வண்டிக்கு ஈஷாவிலேயே தினமும் இலவசமாக சார்ஜ் போட்டு கொள்கின்றனர். ஏதேனும் சிறு பழுது ஏற்பட்டாலும் கட்டணமின்றி சரி செய்து கொள்கின்றனர். அதேபோல், பெட்டி கடையில் டீ, காபி, குளிர் பானங்கள் மற்றும் சிற்றுண்டி உணவுகள் போன்றவற்றை விற்பனை செய்தும் லாபம் ஈட்டி வருகின்றனர்.

இதற்கு முன்னர், தின கூலி வேலைக்கு சென்று கஷ்டப்பட்டு கொண்டு இருந்த பழங்குடி பெண்கள், ஈஷாவின் உதவியால் இப்போது சுய தொழில் செய்து சொந்த காலில் நிற்கும் அளவிற்கு வளர்ந்துள்ளனர். மேலும், ஈட்டிய லாபத்தில் குடும்பத்தை நன்றாக நிர்வகிக்கின்றனர். 

குறிப்பாக, கொரோனா ஊரடங்கு காலத்தில் சில மாதங்கள் கடை நடத்த முடியவில்லை. அப்போது அவர்கள் வங்கியில் சேர்த்து வைத்திருந்த சேமிப்பு தொகையை கொண்டு குடும்பத்தை நிர்வகித்தனர். அந்த பழங்குடியின பெண்களுக்கு ஈஷா தன்னார்வலர்கள் ஆரம்பம் முதல் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்து ஊக்கப்படுத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News