ஆன்மிகம்
சோலைமலை முருகன் கோவில்

கந்த சஷ்டி விழா: சோலைமலை முருகன் கோவிலில் பக்தர்கள் தங்க அனுமதி இல்லை

Published On 2020-11-11 05:55 GMT   |   Update On 2020-11-11 05:55 GMT
சோலைமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது. கொரோனா பரவல் காரணமாக கோவிலில் பக்தர்கள் தங்கி விரதம் இருக்க அனுமதி இல்லை என்றும், இல்லங்களிலேயே காப்பு கட்டி விரதம் இருக்கவும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரை அழகர்கோவில் மலையில் பிரசித்தி பெற்ற 6-ம் படைவீடான சோலைமலை முருகன் கோவில் உள்ளது. இங்கு வருடந்தோறும் ஐப்பசி மாதம் நடைபெறும் மிக முக்கியமான திருவிழாக்களில் கந்த சஷ்டி திருவிழாவும் ஒன்றாகும்.

இந்த விழாவையொட்டி ஒவ்வொரு வருடமும் பக்தர்கள் விழாவின் முதல் நாளன்று கோவிலில் காப்பு கட்டி தங்களது விரதத்தை தொடங்குவார்கள். சூரசம்ஹார நிகழ்ச்சி முடியும்வரை கோவில் வளாகத்தில் தங்கியிருந்து சஷ்டி விரதத்தை கடைபிடிப்பார்கள்.

இந்த வருடம் கந்த சஷ்டி திருவிழாவானது வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 21-ந்தேதி முடிய நடைபெறுகிறது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக அரசு அறிவுறுத்தலின்படி இந்த ஆண்டு கந்தசஷ்டி விழாவில் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவில் உட்பிரகாரத்தில் பக்தர்கள் இன்றி நடைபெறுகிறது.

சூரசம்ஹார நிகழ்ச்சி முடிந்து இருப்பிடம் சேர்ந்த பின் பக்தர்கள் வழக்கம் போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக கோவில் வளாகத்தில் பக்தர்கள் தங்கி விரதம் இருத்தல், அன்னதானம் செய்தல், பிரசாதம் வழங்குதல் போன்றவற்றுக்கு கந்த சஷ்டி நிகழ்ச்சி நடக்கும் 7 நாட்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

எனவே பக்தர்கள் தங்கள் இல்லங்களிலேயே காப்புக் கட்டி கந்தசஷ்டி விரதத்தை தொடங்கி கடைபிடிக்க கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தின்போது நடைபெறும் சூரனை வதம் செய்தல் நிகழ்ச்சி மட்டும் கோவிலின் இணையவழி யூடியூப் தளத்தின் மூலம் ஒளிபரப்பு செய்ய கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

கந்த சஷ்டி விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், கோவில் நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கோவில் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள், அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News