தொழில்நுட்பம்
ஹெர் சர்கில்

மகளிர் தினம் 2021 - பெண்களுக்கான பிரத்யேக சமூக வலைதளம் துவக்கம்

Published On 2021-03-08 04:35 GMT   |   Update On 2021-03-08 04:35 GMT
பெண்களுக்கு பாதுகாப்பான, மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நோக்கத்தில் புதிய சமூக வலைதளம் பிரத்யேகமாக துவங்கப்பட்டு இருக்கிறது.


ரிலையன்ஸ் பவுன்டேஷன் தலைவர் நீட்டா முகேஷ் அம்பானி பெண்களுக்கென பிரத்யேகமாக Her Circle எனும் சமூக வலைதளத்தை வெளியிட்டுள்ளார். சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி புதிய வலைதளம் துவங்கப்பட்டு இருக்கிறது. இது பெண்களுக்கு அதிகாரம், மகிழ்ச்சி, ஒத்துழைப்பு மற்றும் ஊக்கம் அளிக்கும் நோக்கில் துவங்கப்பட்டு இருக்கிறது.

முதற்கட்டமாக இந்த தளம் இந்திய பயனர்களை குறிவைத்து துவங்கப்பட்டு உள்ளது. எனினும், இதனை பல்வேறு நாடுகளை சேர்ந்த பெண்கள் பயன்படுத்தலாம் என ரிலையன்ஸ் பவுன்டேஷன் தெரிவித்து உள்ளது. புதிய Her Circle வலைதளம் அனைத்து வகையான பின்னணியில் இருந்துவரும் பெண்களுக்கு அவர்களின் கனவு, லட்சியம் மற்றும் சிக்கல் நிறைந்த சவால்களை எதிர்கொள்ள உதவுகிறது.



இது வலைதளம், கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஜியோ ஆப் ஸ்டோர்களில் செயலி வடிவிலும் கிடைக்கிறது. தற்போது இந்த சேவை ஐஒஎஸ் தளத்தில் கிடைக்கவில்லை. இந்த தளம் மூலம் உருவாக்கப்படும் தரவுகள் அனைத்தையும் அனைவரும் பார்க்க முடியும். எனினும், இந்த தளத்தின் சமூக வலைதள பிரிவு பெண்கள் மட்டுமே பார்க்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

புதிய Her Circle தளத்தில் வீடியோக்கள், புகைப்படங்கள், கட்டுரைகள் மற்றும் பல்வேறு இதர தரவுகள் கிடைக்கின்றன. இவை அனைத்தும் ஆரோக்கியம், வர்த்தகம், பணி, சமூக சேவை, அழகு, பொழுதுபோக்கு மற்றும் பல்வேறு பிரிவுகளில் கிடைக்கின்றன. இதில் தொண்டு நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களும் பங்கேற்க முடியும்.  
Tags:    

Similar News