செய்திகள்
கோப்புபடம்

அரியலூரில் இடி, மின்னலுடன் பலத்த மழை - வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் ஏரிகளுக்கு தண்ணீர் வரவில்லை

Published On 2021-09-20 11:12 GMT   |   Update On 2021-09-20 11:12 GMT
அரியலூரில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் ஏரிகளுக்கு தண்ணீர் வரவில்லை.
அரியலூர்:

அரியலூர் நகரில் கடந்த சில நாட்களாக சித்திரை மாதத்தில் கத்தரி வெயில் சுட்டெரிப்பதுபோன்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில் நேற்று மாலை வானில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து சிறிய தூறலாக மழை பெய்ய தொடங்கியது.

சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்தது. அதிக சத்தத்துடன் இடி மற்றும் மின்னல் ஏற்பட்டது. சுமார் அரை மணி நேரம் பெய்த மழையால் நகரில் குளிர்ச்சியான சீதோஷண நிலை ஏற்பட்டது. மேலும் மின்சாரம் தடை ஏற்பட்டது.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் அரியலூர் மாவட்டத்தில் போதிய அளவு மழை பெய்யவில்லை. ஜெயங்கொண்டம், செந்துறை பகுதிகளில் பெய்த மழையின் அளவைவிட அரியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைவு. இதனால் அரியலூரை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏரிகள் வறண்ட நிலையில் உள்ளன. பல இடங்களில் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் உள்ளதால், மழைநீர் ஏரிகளுக்கு வருவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News