செய்திகள்
கைது

திருவண்ணாமலையில் ரூ.14 லட்சம் மோசடி செய்த கணவன்-மனைவி கைது

Published On 2020-02-12 11:59 GMT   |   Update On 2020-02-12 11:59 GMT
திருவண்ணாமலையில் ரூ.14 லட்சம் பண மோசடியில் ஈடுபட்ட கணவன், மனைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை வேட்டவலம் சாலையை சேர்ந்தவர் பவன்குமார். இவரது மனைவி ஜெயந்தி. இருவரும் நிதி நிறுவன ஆலோசனை வழங்கும் தனியார் ஏஜென்சி நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை தேனிமலையை சேர்ந்த மணிமேகலை என்பவரிடம் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்று ஜெயந்தி கூறியுள்ளார். அதன்பேரில் கடந்த 2015-ம் ஆண்டு மணிமேகலை ஜெயந்தியிடம் ரூ1 லட்சத்தை கொடுத்துள்ளார்.

பின்னர் சில மாதங்களுக்கு பிறகு ஜெயந்தி ரூ.1லட்சத்து 10 ஆயிரத்தை மணிமேகலைக்கு திருப்பி தந்ததால் நம்பிக்கை அடைந்த மணிமேகலை தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இதுகுறித்து தெரிவித்து ஜெயந்தியிடம் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால் கூடுதல் பலன் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

அதன்பேரில் பல்வேறு நபர்கள் ரூ.14 லட்சத்து 25 ஆயிரத்தை முதலீடு செய்துள்ளனர். ஆனால் அந்த தொகையை திருப்பி தராமல் ஜெயந்தியும் அவரது கணவரும் ஏமாற்றியுள்ளனர்.

இதுகுறித்து நேற்று முன்தினம் திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் மணிமேகலை புகார் செய்தார். அதன்பேரில் நேற்று டி.எஸ்.பி.குமார் வழக்கு பதிவு செய்து ஜெயந்தி மற்றும் அவரது கணவர் பவன்குமாரை கைது செய்தார்.

பின்னர் அவர்கள் திருவண்ணாமலை மா‌ஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். பண மோசடி செய்த கணவன்- மனைவி கைதான சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News