ஆன்மிகம்
நாகூர் தர்காவில் பக்தர்கள் பிரார்த்தனை செய்தபோது எடுத்த படம்.

நாகூர் தர்கா 5 மாதங்களுக்கு பிறகு திறப்பு: சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் பிரார்த்தனை

Published On 2020-09-03 03:59 GMT   |   Update On 2020-09-03 03:59 GMT
5 மாதங்களுக்கு பின்னர் நாகூர் தர்கா நேற்று திறக்கப்பட்டது. சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் தர்காவில் பிரார்த்தனை செய்தனர்.
ஊரடங்கு தளர்வை தொடர்ந்து தமிழகத்தில் நேற்று முன்தினம் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன. ஆனால் நாகை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற நாகூர் தர்கா திறக்கப்படவில்லை. பராமரிப்பு பணிகள் நடைபெற்றதால் நேற்று முன்தினம் தர்கா திறக்கப்படவில்லை என்று தற்காலிக குழு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டு இருந்த நாகூர் தர்கா பக்தர்கள் பிரார்த்தனை செய்ய நேற்று அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டது. முககவசம் அணிந்து வருபவர்கள் மட்டுமே தர்காவுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

தர்காவுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டும் அல்லாது வெளியூர்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் கார், வேன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வந்து பிரார்த்தனை செய்தனர். தர்காவுக்கு வந்த பக்தர்கள் அனைவரும் தெர்மல் கருவி கொண்டு பரிசோதனை செய்யப்பட்டனர்.

ஷாகுல் அமீது காதிர் ஒலி, செய்யது முகமது யூசுப் சாஹிப், அவருடைய மனைவி செய்யது சுல்தான் பீவி அம்மா சாஹிபா ஆகிய மூன்று சமாதிகள் திறக்கப்பட்டன. தர்காவுக்கு வந்த பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பிரார்த்தனை செய்தனர். மேலும் மயில் ரேகை ஆசீர்வாதம், பெரிய ஆண்டவர் பாதப்பெட்டி தரிசனம் உள்ளிட்ட வழிபாடுகளுக்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. தர்காவுக்கு வந்த பக்தர்கள், 10 நிமிடங்களில் பிரார்த்தனை செய்துவிட்டு வெளியேறினர்.

5 மாதங்களுக்கு பிறகு நாகூர் தர்கா திறக்கப்பட்டதால் காலையில் பிரார்த்தனை செய்தது மகிழ்ச்சியாக உள்ளதாக பக்தர்கள் தெரிவித்தனர். இதில் ஜாதி, மத பேதமின்றி அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News