வழிபாடு
பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடந்தபோது எடுத்தபடம்.

திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடக்கம்

Published On 2022-03-31 05:40 GMT   |   Update On 2022-03-31 05:40 GMT
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரவு பெரிய சேஷ வாகனச் சேவை நடந்தது.
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் 9 நாள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கியது. அதையொட்டி நேற்று காலை 9.15 மணியில் இருந்து காலை 9.45 மணிக்குள் விருஷப லக்னத்தில் கங்கணப்பட்டர் ஆனந்தகுமார் தீட்சிதர் தலைமையில் பிரம்மோற்வ விழா கொடியேற்ற நிகழ்ச்சிகள் நடந்தது.

முன்னதாக கருட உருவம் வரைப்பட்ட மஞ்சள் நிறத்திலான கொடியை கோவிலின் நான்கு மாடவீதிகளில் கோவில் ஊழியர்கள், பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். கோவிலில் வைத்து கொடிக்கும், கொடி மரத்துக்கும் அர்ச்சகர்கள் சிறப்புப் பூஜைகள் செய்தனர். அதைத்தொடர்ந்து கொடியை, நாணல் கயிற்றுடன் இணைத்து, வேத பண்டிதர்கள் வேதமந்திரங்களை முழங்க, பக்தர்கள் ராமா.. ராமா.. எனப் பக்தி கோஷம் எழுப்ப கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

அதைத்தொடர்ந்து காலை 7.30 மணியில் இருந்து காலை 9 மணி வரை உற்சவர்களான கோதண்டராமர், சீதா, லட்சுமணருடன் திருவீதி உற்சவம், காலை 9.45 மணியில் இருந்து காலை 10 மணி வரை ஆஸ்தானம் நடந்தது. காலை 11 மணியில் இருந்து மதியம் 12.30 மணி வரை மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகிய சுகந்த திரவியத்தால் அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் இரவு 8 மணியில் இருந்து இரவு 10 மணி வரை பெரிய சேஷ வாகனச் சேவை நடந்தது. அதில் உற்சவர்களான கோதண்டராமர், சீதா, லட்சுமணர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

விழாவில் பெரிய ஜீயர், சின்னஜீயர்சுவாமிகள், கோவில் துணை அதிகாரி பார்வதி, ஆகம ஆலோசகர் விஷ்ணு பட்டாச்சாரியார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News