வழிபாடு
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

மீனாட்சி அம்மன் கோவில் நடை திறப்பு நேரம் மாற்றம்: வருகிற 19-ந்தேதி ஆருத்ரா தரிசனம்

Published On 2021-12-04 05:55 GMT   |   Update On 2021-12-04 05:55 GMT
11-ந்தேதி முதல் 19-ந் தேதி வரை எண்ணெய் காப்பு உற்சவம் நடக்கிறது. மேற்கண்ட நாட்களில் மீனாட்சி அம்மன் கோவில் உற்சவர் சன்னதியில் தைலக்காப்பு மற்றும் தீபாராதனை முடிந்த பின் சுவாமி-அம்பாள் 4 ஆடி வீதிகளில் வலம் வருவார்கள்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருகிற 11-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை மாணிக்கவாசகர் திருவெண்பா உற்சவம் நடைபெறுகிறது. 16-ந்தேதி முதல் ஜனவரி மாதம் 13-ந்தேதி வரை திருஞானசம்பந்தர் சன்னதி முன்பாக பக்தர்களுக்கு ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சி நடக்கும்.

மேற்கண்ட நாட்களில் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு உச்சிக்கால பூஜை முடிந்து, பகல் 12 மணிக்கு நடை சாத்தப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு பல்லாக்கு புறப்பாடாகி பூஜைகள் நடக்கும்.

இவை முடிந்த பின் 9 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். தனுர் மாத திருவிழாவையொட்டி அதிகாலை 4.30 மணி முதல் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

11-ந்தேதி முதல் 19-ந் தேதி வரை எண்ணெய் காப்பு உற்சவம் நடக்கிறது. மேற்கண்ட நாட்களில் மாலை 6 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவில் உற்சவர் சன்னதியில் தைலக்காப்பு மற்றும் தீபாராதனை முடிந்த பின் சுவாமி-அம்பாள் 4 ஆடி வீதிகளில் வலம் வருவார்கள்.

18-ந்தேதி கோ ரதத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி ஆடி வீதிகளில் புறப்பாடாவார். 19-ந்தேதி கனக தண்டியலில் அம்மன் எழுந்தருள்கிறார். 20-ந்தேதி திருவாதிரை அன்று பொன்னூஞ்சல் மண்டபத்தில் இருந்து சுவாமி ரி‌ஷப வாகனத்திலும், அம்மன் மர சிம்மாசனத்திலும் எழுந்தருளி ஆடி வீதிகளில் வலம் வருகிறர்கள்.

11-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை மாணிக்க வாசகர் 100 கால் மண்டபம் நடராஜர் சன்னதி முன்பு உள்ள சவுக்கையில் எழுந்தருள்கிறார். அங்கு திருவெண்பா பாடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 4 ஆடி வீதிகளில் வலம் வருகிறார்.

மார்கழி மாத திருவாதிரை தினமான 19-ந் தேதி நள்ளிரவு முதல் 20-ந்தேதி அதிகாலை வரை நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. பக்தர்கள் சுவாமிக்கு அபிஷேகம் செய்ய பால், தயிர், இளநீர், நெய், மஞ்சள் பொடி, திரவியப்பொடி, எண்ணெய் மற்றும் இதர பொருட்களை 19-ந்தேதி மாலை 7 மணிக்குள் கோவில் உள்துறை அலுவலகத்தில் வழங்கலாம்.

மேற்கண்ட தகவலை கோவில் இணை ஆணையர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News