செய்திகள்
விமானத்தில் பயணிக்க தயாராகும் பயணிகள் (கோப்பு படம்)

கொரோனா அச்சம்... விமானங்களில் பயணிகளுக்கு மது பானம் வழங்குவது நிறுத்தம்

Published On 2020-06-18 05:00 GMT   |   Update On 2020-06-18 05:00 GMT
கொரோனா அச்சம் காரணமாக, விமானங்களில் பயணிகளுக்கு மது பானம் வழங்குவதை பல்வேறு விமான நிறுவனங்கள் நிறுத்தி உள்ளன.
லண்டன்:

உலகம் முழுவதும் பரவி மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ், விமான போக்குவரத்து தொழிலை கடுமையாக முடக்கியது. தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடைமுறைகளுடன் விமானங்கள் இயங்கத் தொடங்கி உள்ளன.

இந்நிலையில் ஐரோப்பாவில் ஈசிஜெட், கேஎல்எம், அமெரிக்காவில் டெல்டா ஏர்லைன்ஸ், அமெரிக்கன் ஏர்லைன்ஸ், ஆசியாவின் விர்ஜின் ஆஸ்திரேலியா உள்ளிட்ட விமான நிறுவனங்கள், தங்கள் பயணிகளின் நலன் மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும், நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கையாகவும், பயணிகளுக்கு மதுபானம் வழங்குவதை நிறுத்தி உள்ளன.

உலகம் முழுவதிலும் இயக்கப்படும் அனைத்து விமானங்களிலும் பயணிகள் மற்றும் ஊழியர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்பது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது பயணிகளுக்கும், விமான ஊழியர்களுக்கும் இடையிலான நேரடி தொடர்பை குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக உணவு மற்றும் பானங்கள் வழங்குவதிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு தண்ணீர் மட்டுமே கொடுக்கின்றன.

குறிப்பாக, பிரிட்டனின் குறைந்த கட்டண விமான நிறுவனமான ஈசிஜெட் நிறுவனம், கடந்த 15ம் தேதி முதல் உள்நாட்டு சேவை மற்றும் பிரான்ஸ் நாட்டுக்கு மட்டும் விமானங்களை இயக்கி வருகிறது. ஒரு சில சர்வதேச விமானங்களையும் இயக்கி வருகிறது. இந்த விமானங்களில் பயணிப்போர் தங்களுக்கு தேவையான உணவு மற்றும் ஆல்கஹால் கலக்காத பானங்களை கொண்டு வரவேண்டும். தண்ணீர் மட்டுமே விமானங்களில் வழங்கப்படும். வரும் மாதங்களில் படிப்படியாக உணவு வழங்குவது மீண்டும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விர்ஜின் அட்லாண்டிக் பயணிகளுக்கு "ஹெல்த் பேக்குகள்" வழங்கப்பட உள்ளது. இதில் முககவசங்கள், துடைப்பான்கள் மற்றும் ஹேண்ட் ஜெல் ஆகியவை இருக்கும்.

கேஎல்எம் விமான நிறுவனமும் அனைத்து வகையான மதுபான விற்பனையை நிறுத்தி வைத்துள்ளது. 9 மணி நேரத்திற்கும் அதிகமான பயணங்களுக்கு மட்டுமே சூடான உணவுகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. பிரிட்டன் ஏர்வேஸ், சிக்கன வகுப்பில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மட்டும் மதுபான சேவையை நிறுத்தி உள்ளது. தண்ணீர் மட்டுமே வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

Tags:    

Similar News