செய்திகள்
மழை

சூறாவளி காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை- குன்னூர், கோத்தகிரியில் 4 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன

Published On 2021-11-30 03:53 GMT   |   Update On 2021-11-30 03:53 GMT
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக குன்னூர் மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ரேலியா அணை தனது முழு கொள்ளளவான 43.5 அடியை எட்டியது.
குன்னூர்:

வடகிழக்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான வண்டிச்சோலை, மவுண்ட் பேட்டன், ஓட்டுப்பட்டரை, சேலாஸ், கொலக்கெம்பை உள்பட நகர் மற்றும் கிராம பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது.

இதனால் குன்னூரில் இருந்து பார்லஸ் செல்லும் சாலையில் நின்றிருந்த மரம் முறிந்து சாலையில் விழுந்தது. மேலும் அங்கிருந்த மின்சார கம்பி மீது பட்டதால் உடனடியாக அந்த பகுதியில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.

இதேபோல் மவுண்ட்பேட்டன் சாலை, பெட்போர்டு செல்லும் சாலைகளிலும் 2 மரங்கள் முறிந்து சாலையின் நடுவே விழுந்தது. இதனால் 3 இடங்களிலும் சில மணி நேரங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுதவிர இரவு முழுவதும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் மக்கள் சிரமம் அடைந்தனர்.

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக குன்னூர் மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ரேலியா அணை தனது முழு கொள்ளளவான 43.5 அடியை எட்டியது.

கோத்தகிரியிலும் பலத்த மழை பெய்தது. கோத்தகிரி பஸ் நிலைய சாலை, குன்னூர் சாலை, ஊட்டி சாலைகள், கட்டபெட்டு செல்லும் சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடுகிறது. காலை நேரம் இரவு போல காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியும், மெதுவாகவும் இயக்கி செல்கின்றனர்.

கோத்தகிரி- ஊட்டி சாலையில் கட்டபெட்டு என்ற இடத்தில் மரம் ஒன்று முறிந்து விழுந்து அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாவட்டத்தின் பிற பகுதிகளான ஊட்டி, கூடலூர், பந்தலூரிலும் மழை பெய்தது. மழையுடன் கடுமையான குளிரும் நிலவுவதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். மழையால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து கலெக்டர் எஸ்.பி.அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக மிதமான காலநிலையே நிலவுகிறது. அவ்வப்போது லேசானது முதல் மிதமான அளவில் மழை பெய்கிறது. நேற்று இரவில் சாரல் மழை பெய்தது. இன்று காலை மேககூட்டங்கள் திரண்டு நகரமே இருள்சூழ்ந்த பகுதியாக காணப்படுகிறது.
Tags:    

Similar News