செய்திகள்
தக்காளி

கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி கிலோவுக்கு ரூ.30 குறைந்தது

Published On 2021-11-25 06:50 GMT   |   Update On 2021-11-25 09:00 GMT
தக்காளி விலை சற்று குறைய தொடங்கி உள்ள போதிலும் பச்சை காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சென்னை:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வந்ததால் பல்வேறு மாவட்டங்களில் தக்காளி விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டது.

இங்கு மட்டுமல்ல ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் அதிக மழை பெய்து வந்ததால் அங்கும் விளைச்சல் பாதிக்கப்பட்டது.

தொடர்மழையால் தக்காளியை உடனுக்குடன் பறித்து லாரியில் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது. தக்காளி செடிகளும் தண்ணீரில் அழுகியது.

இதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுகளில் இருந்தும், ஆந்திரா கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் தக்காளி வரத்து குறைந்தது.

இதனால் கடந்த வாரம் ரூ.60, ரூ.70-க்கு விற்கப்பட்ட 1 கிலோ
தக்காளி
ரூ.140 வரை விலை உயர்ந்தது.

கோயம்பேட்டை சுற்றி உள்ள தி.நகர், வில்லிவாக்கம், பெரம்பூர், ஆவடி, அமைந்தகரை, மயிலாப்பூர், அடையார், திருவான்மியூர், திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, தாம்பரம், குரோம்பேட்டை, எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்ட மார்க்கெட்டுகளிலும் தக்காளி அதிகமான விலைக்கு விற்கப்பட்டது.

இப்போது கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அதிகமான தக்காளி வரத் தொடங்கியதால் மளமளவென தக்காளி விலை குறைய தொடங்கி உள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் 1 கிலோ தக்காளி ரூ.30 வரை விலை குறைந்துள்ளது. இதுபற்றி கோயம்பேடு மார்க்கெட் தக்காளி வியாபாரிகள் சங்கத்தலைவர் எம்.தியாகராஜன் கூறியதாவது:-

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து தக்காளி வருவதுண்டு. ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து அதிக லாரிகளில் தக்காளி லோடு வரும்.



சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் தக்காளி செடிகள் அழுகி பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டது.

வழக்கமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 80 லாரிகளில் தக்காளி வரும். ஆனால் கடந்த சில நாட்களாக 30 லாரிகள் அளவுக்குத்தான் தக்காளி வந்தது.

இதனால் 70 ரூபாய்க்கு விற்கப்பட்ட 1 கிலோ தக்காளி
மொத்த வியாபாரத்தில் ரூ.110 வரை விலை உயர்ந்தது. இவற்றை வாங்கிச் செல்லும் சில்லறை வியாபாரிகள் அதற்கு மேல் விலை வைத்து விற்பார்கள். அந்த வகையில் வெளியில் ரூ.120 முதல் ரூ.140 வரை தக்காளி விற்கப்பட்டுள்ளது.

இப்போது கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இன்று 45 லாரிகளில் தக்காளி வந்துள்ளதால் 1 கிலோ தக்காளி ரூ.110-ல் இருந்து ரூ.80 ஆக குறைந்துள்ளது. 2-ம் ரக தக்காளி 1 கிலோ ரூ.70-க்கு விற்கிறோம்.

இதை வாங்கி விற்கும் சில்லறை வியாபாரிகள் அதற்கேற்ப விலையை குறைப்பார்கள் என நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தக்காளி விலை சற்று குறைய தொடங்கி உள்ள போதிலும் பச்சை காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இனி வரும் நாட்களில் மழை பொழிவை பொறுத்தே காய்கறிகள் விலை குறைய தொடங்கும். இந்த விலை உயர்வு மேலும் 15 நாட்கள் வரை நீடிக்க வாய்ப்புள்ளது என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

இன்றைய காய்கறிகளின் மொத்த விற்பனை விலை விபரம் (கிலோவுக்கு) வருமாறு:-

உஜாலா கத்தரிக்காய் -ரூ.70, வெண்டைக்காய்- ரூ.70, பீன்ஸ்-ரூ.80, பட்டை அவரைக்காய் - ரூ.100, முருங்கைக்காய் - ரூ.120, கோவைக்காய் - ரூ.50, பன்னீர் பாகற்காய் - ரூ.70, குடை மிளகாய் - ரூ.100, பஜ்ஜி மிளகாய் - ரூ.70, புடலங்காய் - ரூ.60, பீர்க்கங்காய் - ரூ.50, ஊட்டி கேரட் -ரூ.50, ஊட்டி பீட்ரூட் - 40, வெள்ளரிக்காய் - ரூ18, முட்டைகோஸ் - ரூ22.


Tags:    

Similar News