செய்திகள்
கேஎஸ் அழகிரி

கியாஸ் விலையை குறைக்காவிட்டால் மகிளா காங்கிரஸ் போராட்டம் நடத்தும் - கே.எஸ்.அழகிரி

Published On 2020-12-15 22:25 GMT   |   Update On 2020-12-15 22:25 GMT
கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்காவிட்டால் மகிளா காங்கிரஸ் போராட்டம் நடத்தும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்தியில் நடைபெற்று வரும் பா.ஜ.க. ஆட்சியில் கடந்த 19 நாட்களாக தங்கள் வாழ்வாதாரத்திற்காக விவசாயிகள் டெல்லியில் போராடி வருகிறார்கள். அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த தயாராகாத பிரதமர் மோடி, குஜராத் மாநிலத்தில் கட்ச் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கே விவசாயிகளைச் சந்தித்து உரையாட இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதைவிட இரட்டை வேடம் வேறு எதுவும் இருக்க முடியாது.

வீட்டு உபயோகத்திற்கான சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையை கடந்த 2-ம் தேதி ரூ.50, 15-ம் தேதி (நேற்று) ரூ.50 என ஒரே மாதத்தில் ரூ.100 விலை ஏற்றப்பட்டிருக்கிறது. சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.610-ல் இருந்து ரூ.710 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

கடந்த மே மாதம் முதற்கொண்டு சமையல் கியாஸ் சிலிண்டருக்கான மானியத்தை பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு செலுத்தாமல் பா.ஜ.க. அரசு தவிர்த்து வருகிறது. மானியத்தையும் பறித்துக்கொண்டு, கலால் வரியையும் உயர்த்துகிற நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன்.

ஒரே மாதத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை ரூ.100 உயர்த்துவதை உடனடியாக மத்திய பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும். இல்லையென்றால், பா.ஜ.க. அரசுக்கு எதிராக தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் விரைவில் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News