செய்திகள்
விமானத்தில் ஏறியதும் அனைவரிடமும் விடைபெற்ற பிரதமர் மோடி

அமெரிக்க சுற்றுப்பயணம் நிறைவு- இந்தியாவிற்கு புறப்பட்டார் மோடி

Published On 2021-09-25 17:06 GMT   |   Update On 2021-09-25 17:06 GMT
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி முதல் முறையாக மோடி வெள்ளை மாளிகையில் நேரில் சந்தித்து பேசினார்.
நியூயார்க்:

ஐ.நா.பொதுசபை கூட்டம் மற்றும் குவாட் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி 4 நாள் சுற்றுப்பயணமாக கடந்த 22-ந்தேதி காலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 

வாஷிங்டன் சென்ற மோடி முதலில் அங்குள்ள 5 முன்னணி தொழில் அதிபர்களை தனித்தனியாக சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிசை சந்தித்து உரையாடினார். ஆஸ்திரேலிய பிரதமர் மற்றும் ஜப்பான் பிரதமர் ஆகியோரையும் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

நேற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனை முதல் முறையாக மோடி வெள்ளை மாளிகையில் நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு இருநாட்டு உறவிலும் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் என்று ஜோ பைடன் தெரிவித்தார்.



அதைத்தொடர்ந்து வெள்ளை மாளிகையில் நடைபெற்ற குவாட் மாநாடில் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் சுகா ஆகியோருடன் மோடி கலந்து கொண்டார். உலக நன்மைக்கான திட்டங்களை குவாட் செயல்படுத்தும் என்று இந்த மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

பின்னர் நியூயார்க் வந்த பிரதமர் மோடி, இன்று இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு ஐ.நா. பொதுசபை கூட்டத்தின் 76வது அமர்வில் உரையாற்றினார். கொரோனா வைரஸ் தொற்று பரவல், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை, ஆப்கானிஸ்தான் நிலவரம் ஆகியவை குறித்து அவர் பேசினார். 

ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பங்கேற்றதுடன் அவரது அமெரிக்க சுற்றுப்பயணம் நிறைவடைந்தது. கூட்டம் முடிந்த பிறகு இன்று இரவு நியூயார்க்கில் உள்ள ஜான் எப்.கென்னடி சர்வதேச விமான நிலையம் வந்த மோடி, அங்கிருந்து விமானத்தில் இந்தியாவிற்கு புறப்பட்டார். நாளை காலை 11.30 மணியளவில் டெல்லி வந்தடைகிறார்.
Tags:    

Similar News