செய்திகள்
அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழும் காட்சி

கொச்சியில் விதிகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு

Published On 2020-01-11 06:21 GMT   |   Update On 2020-01-11 06:21 GMT
கேரள மாநிலம் கொச்சி மரடு பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 2 அடுக்குமாடி குடியிருப்புகள் இன்று குண்டுவைத்து தகர்க்கப்பட்டது. மீதம் உள்ள 2 குடியிருப்புகள் நாளை வெடிவைத்து தகர்க்கப்பட உள்ளது.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கொச்சி மரடு பகுதியில் கடலும், ஆறும் சேரும் காயல் பகுதியில் 4 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. இதில் மொத்தம் 343 வீடுகள் இருந்தன.

இந்த 4 அடுக்கு மாடி குடியிருப்புகளும் கடற்கரை ஒழுங்குமுறை விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 4 அடுக்குமாடி குடியிருப்புகளையும் இடிக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்கும் பணிகளை கேரள அரசு தொடங்கியது. முதல் கட்டமாக 4 குடியிருப்புகளிலும் வசித்தவர்கள் அனைவருக்கும் நோட்டீசு வழங்கப்பட்டு அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

தொடர்ந்து அந்த குடியிருப்புகளை குண்டு வைத்து தகர்க்க முடிவு செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக 4 குடியிருப்புகளில் ஒவ்வொரு தளங்களிலும் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்டன.

4 குடியிருப்புகளில் ஹோலிபெய்த், ஆல்பா ஷெரீன் என்ற 2 குடியிருப்புகள் இன்றும், ஜெயின் கோரல் கோவ், கோல்டன் காயலோரம் குடியிருப்புகள் நாளையும் தகர்க்க ஏற்பாடுகள் நடந்தது. நேற்று சென்னை ஐ.ஐ.டி. நிபுணர்கள் முன்னிலையில் ஒத்திகை பார்க்கப்பட்டது. மேலும் இன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. அந்த பகுதியில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

இன்று காலை 9 மணிக்கு ஹோலிபெய்த் அடுக்குமாடி குடியிருப்பை குண்டுவைத்து தகர்ப்பதற்கான பணிகள் தொடங்கியது. 9 மணிக்கு அந்த கட்டிடங்களை சுற்றி 200 மீட்டர் சுற்றளவில் உள்ள அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டனர். அந்த கட்டிடங்களை சுற்றியுள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

10.30 மணிக்கு முதல் எச்சரிக்கை அலாரம் ஒலிக்கப்பட்டது. பின்னர் அப்பகுதியில் வசிப்பவர்கள் அனைவரும் சென்று விட்டார்களா? என உறுதி செய்யப்பட்டது 10.55 மணிக்கு 2-வது அலாரமும், 10.59 மணிக்கு 3-வது அலாரமும் ஒலிக்கப்பட்டது.

11 மணிக்கு அந்த குடியிருப்பில் இருந்த வெடிகுண்டுகளை நிபுணர்கள் வெடிக்கச் செய்தனர். பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டுகள் வெடித்தன. அந்த கட்டிடத்தில் 19 தளங்களாக 98 அபார்ட்மெண்டுகள் இருந்தன. வெடிகுண்டுகள் வெடித்தவுடன் கட்டிடத்தில் இருந்த ஒவ்வொரு தளங்களும் சுக்கல், சுக்கலாக நொறுங்கி விழுந்தன.

சில வினாடிகளில் அந்த இடத்தில் குடியிருப்பு இருந்ததற்கான அடையாளமே தெரியவில்லை. சிமெண்டு கழிவுகள் நிரம்பி கிடக்கும் இடம் போல் அந்த இடம் மாறியது. அதேசமயம் கட்டிட இடிபாடுகளில் இருந்து வெளியேறிய தூசி பல கிலோ மீட்டர் தூரம் பறந்தது. தீயணைப்பு வீரர்கள் தூசி பறக்காமல் தடுத்து அணைத்தனர்.

அடுத்த சில நிமிடங்களுக்கு பிறகு ஆல்பாஷெரீன் என்ற பெயரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பும் குண்டுவைத்து தகர்க்கப்பட்டது. இந்த குடியிருப்பில் 16 தளங்களில் 80 அபார்ட்டுமெண்டுகள் இருந்தன. இவையும் ஒவ்வொரு தளங்களாக இடிந்து நொறுங்கி விழுந்தது.




அடுக்குமாடி குடியிருப்பு இடிக்கப்படுவதை பார்க்க அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் கூடி நின்றனர். அவர்களை போலீசார் வெகுதொலைவிலேயே தடுத்து நிறுத்தினர். அங்கு நின்றவாறே அவர்கள் கட்டிடங்கள் குண்டுவைத்து தகர்க்கப்படுவதை பார்த்தனர்.

இதையொட்டி போலீசார் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்து இருந்தனர். குண்டுவைத்து தகர்ப்பு காட்சிகளை படம் பிடிக்கும் ஆர்வத்தில் யாராவது ஆளில்லா விமானங்களை பறக்கவிட்டால் அதனை சுட்டு வீழ்த்துவோம் எனவும் எச்சரித்து இருந்தனர்.

நாளை மீதம் உள்ள 2 குடியிருப்புகளும் வெடி வைத்து தகர்க்கப்படுகிறது. நாளை காலை 11 மணி அளவில் ஜெயின் கோரல் கோவ் குடியிருப்பும், பிற்பகல் 2 மணிக்கு கோல்டன் காயலோரம் குடியிருப்பும் இடிக்கப்பட உள்ளது.

Tags:    

Similar News