லைஃப்ஸ்டைல்
தாய்ப்பால்

தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வும்.. சந்தேகங்களுக்கு தீர்வும்..

Published On 2020-08-03 06:37 GMT   |   Update On 2020-08-03 06:37 GMT
இன்றைய நவீன உலகில் பெற்றெடுத்த குழந்தைக்கு மட்டுமல்ல, தத்தெடுத்த குழந்தைக்கு கூட தாய்ப்பால் கொடுக்கும் அளவிற்கு தீர்வுகள் வந்துவிட்டன.
ஆகஸ்டு மாதத்தின் முதல் வாரம் தாய்ப்பால் விழிப்புணர்வு வாரமாக கொண்டாடப்படுகிறது. அந்த கால கட்டத்தில், உலகெங்கிலும் பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் இம்முறை கொரோனா தாக்கத்தினால், தாய்ப்பால் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், கொண்டாட்டங்களையும் நிறுத்தி வைத்துள்ளனர்.

தாய்ப்பால் ஊட்டுதலுக்கு தனி விழிப்புணர்வு தேவையா?, எதற்காக இந்த முயற்சி?, ஆண்டுதோறும் நடத்தப்பட்டும் விழிப்புணர்வு போதவில்லையா?... போன்ற பல கேள்விகள் நம் மனதில் எழுந்தாலும், இவை அனைத்திற்குமான விடை டீனா அபிஷேக்கிடம் கிடைத்தது. சென்னையை சேர்ந்தவரான இவர், பால் ஊட்டுதல் ஆலோசகராக பணியாற்றுகிறார். அவர் பகிர்ந்து கொண்ட சில விஷயங்கள் இதோ...

* ‘உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வாரம்’ ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இருப்பினும் விழிப்புணர்வு போதவில்லையா?

இப்படி ஒரு நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெறுகிறது. உலக அளவிலும் நடக்கிறது. தாய்மை அடைந்தவர்களுக்காகவே நடக்கிறது. ஆனால் பெரும்பாலான தாய்மார்களுக்கு இப்படியொரு நிகழ்வு நடப்பதும், நடைபெற இருப்பதும் தெரிவதில்லை. அதனால்தான், ஆண்டுதோறும் நடத்தப்பட்டும் போதிய விழிப்புணர்வு உருவாகுவதில்லை.

* இந்த விஷயத்தில் வீட்டில் இருக்கும் பெரியோர்களின் அறிவுரைகள் போதுமானதாக இருக்காதா? பிரத்யேக விழிப்புணர்வு தேவையா?

சில நல்ல விஷயங்களும், சில நம்பக்கூடாத விஷயங்களும் ஆண்டாண்டு காலமாக அறிவுரைகளாக உலா வருகின்றன. அதில் எது உண்மை? எது பொய்? என்பதை தெளிவுபடுத்திக்கொள்ள இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அவசியமாகின்றன.

* அப்படி என்னென்ன விஷயங்கள் உலா வருகின்றன?

தாய்ப்பால் சுரப்பிற்கு உடம்பில் இருக்கும் சில ஹார்மோன்களே காரணமாகின்றன. எந்தவித மருந்தும், உணவும் இதற்கு தீர்வாகாது. ஆனால் அம்மா அதிகமாக பால் குடித்தால், அதிக தாய்ப்பால் சுரக்கும் என்ற கருத்தும், சூடாகவோ-குளிர்ச்சியாகவோ சாப்பிட்டால் கர்ப்பப்பை பாதிக்கப்படும் என்ற கருத்தும் நம்பக்கூடாதவை. அதே போல குழந்தை பிறந்த உடனே, அதீத தாய்ப்பால் சுரந்துவிடும் என்ற கருத்திலும் உண்மை இல்லை. பிறந்த குழந்தைக்கு முதல் மூன்று நாட்களுக்கு 3 முதல் 5 மி.லி. பாலே உணவாக தேவைப் படுகிறது. ஆரம்பத்தில் இந்த அளவு பால் சுரந்தாலே போது மானது. நாட்களின் எண் ணிக்கை அதிகரிக்கும்போதுதான், தாய்ப்பால் சுரப்பும் அதிகரிக்கும். இயல்பான இந்த விஷயத்தை பல குடும்பங்கள் பூதாகரமாக மாற்றிவிடுகின்றன. சிலர் பாக்கெட் பால் கொடுக்கும் அளவிற்கு இந்த விஷயத்தை பெரிதாக்கி விடுகிறார்கள்.

* தாய்ப்பால் சுரப்பின்மைக்கு தீர்வு உள்ளதா? விளக்குங்கள்?

இருக்கிறது. இன்றைய நவீன உலகில் பெற்றெடுத்த குழந்தைக்கு மட்டுமல்ல, தத்தெடுத்த குழந்தைக்கு கூட தாய்ப்பால் கொடுக்கும் அளவிற்கு தீர்வுகள் வந்துவிட்டன.

தாய்ப்பால் இல்லாவிட்டாலும், தாய்ப்பால் சுரப்பது போல் எண்ணி குழந்தையை மார்பின் மீது வைத்து பால் குடிக்க அனுமதிக்க வேண்டும். இந்த உந்துதல் மூலம் பால் சுரக்க ஆரம்பிக்கும்.

குறைந்தது ஒரு தினத்திற்கு 10 முதல் 12 முறையாவது இதை பின்பற்ற வேண்டும். அதோடு கங்காரூ கேர் (Ka-n-g-a-r-oo Care) என கூறப்படும் வழிமுறையையும் பின்பற்றவேண்டும். தாயின் ஸ்பரிசத்தில் குழந் தையை தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் இருக்கச் செய்வதன் மூலம், ஹார்மோன்கள் தூண்டப்பட்டு இயற்கையாகவே தாய்ப்பால் சுரப்பு நிகழும். இதுபோல பல இயற்கை வழிமுறைகளினால் தாய்ப்பால் சுரப்பின்மைக்கு தீர்வு காணலாம்.

* கொரோனா நோயாளிகள் தாய்ப்பால் கொடுக்கலாமா? ஏதாவது பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவையா?

தாராளமாக கொடுக்கலாம். தாய்ப்பால் மூலமாக கொரோனா நோய் தொற்று பரவாது என்ற கருத்திற்கு உலக மருத்துவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கூடவே, நோய் தாக்கத்தில் இருந்து குழந்தையை காக்க, விஷேச நோய் எதிர்ப்பு சக்தி தாய்ப்பாலில் சுரக்கும் வாய்ப்பிருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள். அதனால் பாதுகாப்பு நடைமுறைகளுடன், தாய்ப்பால் வழங்கலாம். மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் பால் சேகரிப்பானில் தாய்ப்பாலை சேமித்து, உறவினர் மூலமாக தாய்ப்பால் ஊட்டலாம்.

தாய்ப்பால் ஊட்டுதலில் இழைக்கப்படும் தவறுகள் என்ன?

பிறந்தது முதல் அடுத்த 6 மாதங்களுக்கு குழந் தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்கவேண்டும். அதை தவிர்த்து, வேறு எதை ஊட்டினாலும் அது தவறுகள் பட்டியலில்தான் சேரும். குறிப்பாக சர்க்கரை தண்ணீர் ஊட்டுவது, தேன் கொடுப்பது, தண்ணீர் குடிக்க கொடுப்பது, வசம்பு தேய்ப்பது போன்றவை எல்லாம் கட்டாயம் தவிர்க்கவேண்டிய விஷயங்கள். குழந்தைக்கு எது கொடுக்க நினைத்தாலும், அதை தாய்க்கு சாப்பிட கொடுத்து, தாய்ப்பால் மூலமாக குழந்தைக்கு கொடுங்கள். அதுவே சிறந்தது.
Tags:    

Similar News