குழந்தை பராமரிப்பு
காணாமல் போகும் சிறுமிகள்

காணாமல் போகும் சிறுமிகள்

Published On 2022-01-27 03:33 GMT   |   Update On 2022-01-27 03:33 GMT
2021-ம் ஆண்டில் கடத்தப்பட்ட மைனர் சிறுமிகளின் வழக்குகளில் பெரும்பாலானவை ஆண்டின் கடைசி காலாண்டில் பதிவாகியுள்ளன என்றும் காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
கர்நாடகாவில் வீட்டை விட்டு வெளியேறி காணாமல் போய், கண்டுபிடிக்கப்படாத மைனர் பெண்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்துள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. குடும்ப தகராறு, வீட்டு சூழல், பொருளாதார நிலைமை, தங்களின் விருப்பம் இல்லாமல் திருமணம் செய்வதற்கு நிர்பந்திக்கப்படுவது போன்றவை காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

2021-ம் ஆண்டில் கடத்தப்பட்ட மைனர் சிறுமிகளின் வழக்குகளில் பெரும்பாலானவை ஆண்டின் கடைசி காலாண்டில் பதிவாகியுள்ளன என்றும் காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது. அவர்கள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது. கடத்தப்பட்ட 578 சிறுமிகளில் 105 சிறுமிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று காவல்துறை பதிவுகள் காட்டுகின்றன.

இந்த எண்ணிக்கை 2020-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்படாத சிறுமிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது பத்து மடங்கு அதிகமாகும். அதாவது 2020-ம் ஆண்டில் 463 சிறுமிகள் கடத்தப்பட்டனர். அதில் 453 பேர் மீட்கப்பட்டுவிட்டனர். 2019-ம் ஆண்டில் 600 சிறுமிகள் கடத்தப்பட்டனர். அவர்களில் 585 பேர் மீட்கப்பட்டுவிட்டனர். 15 பேர் மட்டுமே கண்டுபிடிக்கப்படவில்லை.

காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘காணாமல் போனவர்களில் 90 சதவீத வழக்குகளில் தொடர்புடையவர்கள் வீட்டை விட்டு திட்டமிட்டு சென்றவர்கள். அவர்கள் மாநிலத்திற்குள்ளோ, அல்லது வேறு மாநிலத்திற்குள்ளோ ஏதோவொரு மூலையில் குடியேறுவதால் காவல்துறையினரால் கண்டுபிடிப்பது கடினம்’’ என்கிறார். மேலும் பல வழக்குகளில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கும், அவர் விரும்பிய நபருக்கும் திருமணம் நடந்திருக்கும் என்றும் சொல்கிறார்.

‘‘போலீசார் தங்களை தேடுவது தெரிந்துவிட்டால் மொபைல்போன்களை பயன்படுத்துவதை நிறுத்துவிடுவார்கள். அல்லது மற்றவர்கள் தொடர்பு கொள்ளாமல் இருப்பதற்காக செல்போன் எண்ணை மாற்றிவிடுவார்கள்.

சில சமயங்களில் தங்களது குடும்ப உறவினர்கள் அல்லது நண்பர்களை தொடர்பு கொண்டு பேசுவதன் மூலம் அவர்களின் இருப்பிடத்தை அறிந்து கொள்ள முடியும். இப்படிப்பட்ட வழக்குகளில் சில விரைவாக முடிவுக்கு வந்துவிடும். பெரும்பாலானவை இழுபறியாகவே நீடிக்கும்’’ என்கிறார்.

மைனர் சிறுமிகளில் பலர் பெற்றோருக்கு தெரியாமல் விரும்பியவர்களுடன் சென்றார்களா? அல்லது கடத்தப்பட்டார்களா என்பது உறுதியாக தெரியாததால் முதல்கட்டமாக வழக்கு பதிவு செய்வதில் குழப்பம் இருப்பதாகவும் காவல்துறை கூறுகிறது.

உலகளவில் காணாமல் போகும் பெண்கள் பற்றிய வழக்குகளில் பாதிக்கும் மேற்பட்டவை இந்தியாவில் பதிவாகுவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. மேலும் சமூக-பொருளாதார, வரலாற்று மற்றும் கலாசார காரணிகளால் ஆண்களை விட பெண்கள் அதிக பாகுபாட்டை எதிர்கொள்கிறார்கள் என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
Tags:    

Similar News