உள்ளூர் செய்திகள்
திருமாவளவன்

திருமாவளவன் பங்கேற்கும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி- எழும்பூரில் இன்று மாலை நடக்கிறது

Published On 2022-04-15 06:52 GMT   |   Update On 2022-04-15 06:52 GMT
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இஸ்லாமிய ஜனநாயக பேரவை சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு எழும்பூர் பைஸ் மகாலில் நடைபெறுகிறது.
சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அதிகாலையில் நோன்பு இருந்து மாலையில் நோன்பு திறக்கும் முறையை பின்பற்றி வருகிறார்.

இஸ்லாமியர்கள் அதிகாலையில் நோன்பு தொடங்கி மாலையில் நோன்பை திறப்பார்கள். அதுபோல 18 வருடமாக இதனை திருமாவளவன் பின்பற்றி வருகிறார். அதிகாலை 5 மணிக்கு முன்னதாக சகர் என்று கூறப்படும் நோன்பு தொடங்குவார்.

அப்போது உணவு அருந்தி இதனை தொடங்குவார். அதன் பிறகு பகல் முழுவதும் எதுவும் சாப்பிடாமல், தண்ணீர் குடிக்காமல் நோன்பு இருந்து மாலை 6.30 மணிக்கு நோன்பு திறப்பார். கடந்த 11-ந் தேதி திருமாவளவன் இப்தார் நோன்பை தொடங்கினார். 5நாட்கள் நோன்பு இருந்து வரும் அவர் இன்றுடன் அதனை நிறைவு செய்கிறார்.

இதையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இஸ்லாமிய ஜனநாயக பேரவை சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு எழும்பூர் பைஸ் மகாலில் நடைபெறுகிறது.

நிகழ்ச்சிக்கு இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநில செயலாளர் அப்துல் ரகுமான் தலைமை தாங்குகிறார். மாநில துணை செயலாளர்கள் முத்து முகமது, புருணை அக்பர், தொழில் அதிபர் முகமது சலீம் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

மக்கா கலீல் வரவேற்கிறார். சிறப்பு விருந்தினராக அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் எம்.அப்துல் ரகுமான் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இப்தார் உரை நிகழ்த்துகிறார்.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏக்கள் சிந்தனை செல்வன், எஸ்.எஸ். பாலாஜி, பனையூர் பாபு, மாவட்ட செயலாளர்கள் இரா.செல்வம், செல்லத்துரை, அல்காலித், ஷேக் அப்துல்லா, கவிஞர் அஜ்மல்கான் மற்றும் பல்வேறு முஸ்லிம் அமைப்பை சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

நிகழ்ச்சியின் முடிவில் தொழில் அதிபர் முகமது சலீம், ஜாபர் சாதிக் ஆகியோர் தலைமையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 200 பேர் திருமாவளவன் முன்னிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைகிறார்கள்.
Tags:    

Similar News