செய்திகள்
கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

திருச்சி அரசு மருத்துவமனையில் 1½ லட்சம் பேருக்கு இதுவரை ‘கொரோனா’ பரிசோதனை

Published On 2020-09-24 08:28 GMT   |   Update On 2020-09-24 08:28 GMT
திருச்சி அரசு மருத்துவமனையில் 1½ லட்சம் பேருக்கு இதுவரை ‘கொரோனா’ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருச்சி:

திருச்சி தலைமை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த மார்ச் மாத தொடக்கத்திலேயே கொரோனா சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டன. திருச்சியில் விமான நிலையம் அமைந்துள்ளதால் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

பின்னர் கடந்த மார்ச் 24-ந்தேதி முதல் திருச்சி அரசு தலைமை ஆஸ்பத்திரியின் நுண்ணுயிரியல் துறை சார்பில் ரத்த மற்றும் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனை தொடங்கப்பட்டது. அன்றில் இருந்து நேற்று (புதன்கிழமை) வரை 1 லட்சத்து 54 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்டு 25-ந்தேதி வரை 1 லட்சம் பரிசோதனைகள் நடந்தன. இது மருத்துவத்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்லாக கருதப்பட்டது. இதையடுத்து லேப் டாக்டர்கள், டெக்னிசீயன்கள், மருத்து பணியாளர்கள் கேக் வெட்டி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

திருச்சியில் கொரோனா அச்சத்தில் சில தனியார் ஆய்வகங்கள் பரிசோதனைகளை நிறுத்திய நிலையிலும் இடைவிடாமல் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனைகள் நடந்து வந்தன. ஆரம்பத்தில் தினமும் 100 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. பின்னர் நவீன ஆர்.டி. பி.சி.ஆர். எந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. இதனால் துரிதமாக பரிசோதனைகள் நடந்து வருகின்றன.

தற்போதைய நிலையில் நாள் ஒன்றுக்கு 1800 முதல் 2000 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. இது பற்றி அரசு ஆஸ்பத்திரி நுண்ணுயிரியல் துறைத் தலைவர் டாக்டர் லட்சுமி கூறும்போது, தொடக்கத்தில் அண்டை மாவட்டங்களில் இருந்தும் மாதிரிகள் பரிசோதனைக்கு வந்தன.

அந்த வகையில் வெளி மாவட்டங்களை சேர்ந்த 5000 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொண்டோம். மீதம் உள்ள 1 லட்சத்து 49 ஆயிரம் பரிசோதனைகளும் திருச்சி மாவட்ட மக்களுக்கே மேற்கொள்ளப்பட்டது.

இப்போது திருச்சியில் காய்ச்சல் சிறப்பு முகாம்களில் சேகரிக்கப்படும் மாதிரிகள் மற்றும் தாமாக முன் வருபவர்களுக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது. அண்டை மாவட்டங்களிலும் கொரோனா பரிசோதனைகள் தொடங்கப்பட்டதால் எங்களின் சுமை கணிசமாக குறைந்துள்ளது. நவீன எந்திரங்களும் துணை நிற்கின்றன.

பொது போக்குவரத்து திறந்து விடப்பட்டுள்ளதால் நிறைய பேருக்கு தொற்று ஏற்படும் என பயந்தோம். ஆனால் மற்ற மாவட்டங்களை ஒப்பிடும்போது குறைவாகவே உள்ளது. கடந்த இரு மாதங்களாகவே சராசரியாக திருச்சியில் 100 பேருக்கு தொற்று உறுதியாகி வருகிறது. அதில் மாற்றம் ஏற்படவில்லை என்றார்.
Tags:    

Similar News