ஆன்மிகம்
இனிய வாழ்வு தரும் இறைநம்பிக்கை

சுத்தம் பேணுவீர், சுகாதாரம் பெறுவீர்

Published On 2019-10-22 03:56 GMT   |   Update On 2019-10-22 03:56 GMT
நோயிலிருந்து தமது உடலை பாதுகாத்திட நினைப்பவர் தாம் வசிக்கும் இடத்தையும், தமது சுற்றுச்சூழலையும் தாம் பயன்படுத்தும் தளவாட சாமான்களையும் சுத்தமான முறையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘சுத்தம் பேணுவீர், சுகாதாரம் பெறுவீர்’ என்பது குறித்த தகவல்களை காண்போம்.

மனிதன் உடல் மற்றும் உளரீதியாக நலமாக வாழ வேண்டும். நலமான வாழ்வின் மூலமே ஒருவனின் வாழ்வு சிறப்பாக அமையும். நலமான வாழ்விற்கு வழிகாட்டுவதே சுத்தமும், சுகாதாரமும் தான்.

சுத்தம் செய்வதை, சுத்தமாக இருப்பதை, சுற்றுச்சூழலை சுகாதாரமாக வைத்திருப்பதை இஸ்லாம் இறை நம்பிக்கையின் உடல் சார்ந்த ஒரு பகுதியாகவே பார்க்கிறது. இறைநம்பிக்கைக்கு அடுத்து இஸ்லாத்தில் இடம் பிடித்ததும், தடம் பிடித்ததும் சுத்தம்தான். இதையே இந்த நபிமொழியும் வலியுறுத்துகிறது:

‘சுத்தம் இறைநம்பிக்கையில் பாதியாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (அறிவிப்பாளர்: அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி), நூல்: முஸ்லிம்).

உடல் சுத்தம்

சுத்தம் சம்பந்தமான 3 நடவடிக்கைகளை இஸ்லாம் போதிக்கிறது. முதலாவதாக உடல் சுத்தம் குறித்து இஸ்லாம் அதிகமான விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. கடமையான குளிப்பின் மூலம் உடல் முழுவதையும் சுத்தமாக வைத்திருப்பது அல்லது தினம் தினம் வழமையான குளிப்பின் மூலம் உடல் முழுவதையும் சுத்தமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருப்பது.

கணவன்-மனைவி இருவரும் உடல் உறவு கொண்டாலோ, அல்லது பருவ வயதை அடைந்த ஆண்-பெண் இருபாலினத்தவருக்கும் ஸ்கலிதம் ஏற்பட்டாலோ இருவரும் குளித்து, சுத்தமாக இருப்பது கடமையாகும்.

வாரம் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று குளிப்பது நபி (ஸல்) அவர்களின் நடைமுறையாக உள்ளது.

‘வெள்ளிக்கிழமை உங்களுக்குக் குளிப்புக்கடமையாக இல்லாவிட்டாலும் உங்கள் தலையைக் கழுவிக் கொள்ளுங்கள்; குளியுங்கள்; மேலும் நறுமணம் பூசிக்கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: தாவூஸ் (ரஹ்), நூல்: புகாரி)

குளிப்பது என்பது உடல் ரீதியான பெரும் சுத்தமாகும். இதைத் தவிர சிறிய வகையான சுத்தமும் இருக்கிறது. அதற்கு ‘அங்கசுத்தம்’ என்று பெயர். இஸ்லாமியர்கள் ஒவ்வொரு நாளும் கடமையான ஐவேளை தொழுகைகளை நிறைவேற்றும் முன்பு அங்கசுத்தம் செய்து கொள்வது அவர்களின் மீது கடமையாகும். இது குறித்து இறைவன் திருக்குர்ஆனில் விளக்குவதை காண்போம்.

‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது, உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக்கொள்ளுங்கள். உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள். குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்’. (திருக்குர்ஆன் 5:6)

இந்தப் பகுதிகளை ஏன் கழுவ வேண்டும்? இதற்கு இஸ்லாமிய ஆன்மிக ரீதியான காரணங்களும் இருக்கிறது, அறிவியல் ரீதியான காரணங்களும் இருக்கிறது. ஆன்மிக காரணங்களை காண்போம். அங்கசுத்தம் செய்வதால் அவர் உறுப்புகள் செய்த சிறு பாவங்கள் கழுவப்பட்டு, பாவ அழுக்கிலிருந்து அவர் பரிசுத்தப்படுத்தப்படுகிறார். இதுகுறித்து பேசும் நபி மொழிகளை படிப்போம்:

‘ஒருவர் முறையாக அங்கத்தூய்மை செய்யும் போது (அவர் செய்திருந்த) அவருடைய (சிறு) பாவங்கள் அவரது உடலிலிருந்து வெளியேறி விடுகின்றன. முடிவில் அவரது நகக் கண்களுக்குக் கீழேயிருந்தும் பாவங்கள் வெளியேறி விடுகின்றன என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: உஸ்மான் (ரலி), நூல்: முஸ்லிம்)

அங்க சுத்தம் செய்யும் போது நீரை வைத்து வாயை சுத்தம் செய்வதும், மூக்கை சுத்தம் செய்வதும் நபி வழியாக அமைந்துள்ளது.

‘அங்கசுத்தம் செய்பவர் மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி வெளியாக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

‘நபி (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை செய்ததை நான் பார்த்தேன். அப்போது அவர்கள் வாய் கொப்பளித்து விட்டு மூக்கிற்கு நீர் செலுத்தி மூக்கு சிந்தினார்கள்’. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி), நூல்: முஸ்லிம்)

வாய், மூக்கு இரண்டையும் சுத்தம் செய்யும் போது அவ்விரண்டும் செய்த பாவங்கள் நீரால் கழுவப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது. அறிவியல் ரீதியான காரணங்கள் யாதெனில் ‘செத்து போன செல்கள் உடம்பில் இருக்கின்றன. அவை உடல் தோலின் மேல்பகுதிக்கு வந்துவிடுகின்றன. அவை கழுவப்படாமல் விடப்பட்டால் அது காற்றின் மூலமாக உடலுக்குச் சென்று நோய் தாக்குதலை ஏற்படுத்திவிடும். அந்த வியாதி எத்தகைய தன்மை உடையது எனில் நினைத்ததையே நினைப்பது, பேசியதையே பேசுவது, விரக்தியாக இருப்பது போன்று ஏற்படும். இதனால் ஒருவகையான மனச்சிதைவுக்கு ஆளாக நேரிடும்.

அங்கத் தூய்மை செய்யும் போது வாய் கொப்பளிப்பதாலும், மூக்கிற்கு நீர் செலுத்துவதாலும், காதுகளை நீரால் தடவுவதாலும் அவற்றிலுள்ள பாக்டீரியாக்கள் வெளியேறிவிடுகின்றன. இந்த ஆய்வை ஒரு மனோதத்துவ நிபுணர் 1997-ல் கண்டுபிடித்துக் கூறினார்.

நபி (ஸல்) அவர்கள் சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது பிறகு இவற்றிலிருந்து எவ்வாறு தூய்மை பெறுவது போன்ற சின்ன சின்ன விஷயங்களையும் தமது தோழர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

‘சல்மான் பார்ஸீ அவர்களிடம் ‘மலம் கழிக்கும் முறை உட்பட அனைத்தையுமே உங்கள் இறைத்தூதர் உங்களுக்குக் கற்றுத் தந்திருக்கிறார் போலும்’ என்று பரிகாசத்துடன் இணைவைப்பாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் ‘ஆம், உண்மைதான்; மலம் கழிக்கும் போது மேற்கு திசையை முன்னோக்க வேண்டாமென்றும், கழித்தபின் வலக்கரத்தால் துப்பரவு செய்ய வேண்டாமென்றும், கெட்டிச் சாணத்தாலோ, எலும்பாலோ துப்பரவு செய்ய வேண்டாமென்றும் எங்களை எங்கள் நபி தடுத்தார்கள்’ என்று கூறினார்’. (நூல்: முஸ்லிம்)

உடை சுத்தம்

இஸ்லாம் உடல் சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது போன்று உடையை சுத்தமாக வைத்திருப்பதற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது. உடை அசுத்தமானதாக இருந்தால், அதில் நுண்கிருமிகள் உருவாகி, அதை உடுத்தியவரின் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

‘உமது ஆடைகளைத் தூய்மைப்படுத்துவீராக, அசுத்தத்தை வெறுப்பீராக’ என்று திருக்குர்ஆன் (74:4,5) வலியுறுத்துகிறது.

இதுகுறித்த நபிமொழி வருமாறு:

‘நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தபோது ஒரு மனிதரைக் கண்டார்கள். அவரின் தலைமுடி சீர் செய்யப்படாமல் பரட்டையாக இருந்தது. ‘இவர் முடியை சரி செய்வதற்கு தேவையான பொருளை பெற்றுக் கொள்ளவில்லையா?’ என்று கேட்டார்கள். இன்னொரு மனிதரை அவரின் அழுக்கான ஆடையைக் கண்டு ‘அவர் தமது ஆடையை கழுவதற்கு தேவையான பொருளை பெற்றுக் கொள்ளவில்லையா?’ என்று கேட்டார்கள்’. (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: அபூதாவூத்)

இடம் சுத்தம்

அதாவது நோயிலிருந்து தமது உடலை பாதுகாத்திட நினைப்பவர் தாம் வசிக்கும் இடத்தையும், தமது சுற்றுச்சூழலையும் தாம் பயன்படுத்தும் தளவாட சாமான்களையும் சுத்தமான முறையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒருவர் எச்சிலை துப்புவதாக இருந்தாலும் கண்டபடி கண்ட இடத்தில் துப்பக் கூடாது. இதனால் சுற்றுச்சூழல் மாசுபட்டு, பலவிதமான நோய் தொற்றுகள் காற்றினால் பரவி, மனிதர்களை தாக்கி பாதிப்பை ஏற்படுத்தும். இதை வலியுறுத்தும் நபிமொழி இது:

‘உங்களில் ஒருவர் எச்சில் துப்பினால் வலது புறமோ, தமது முன்புறமோ துப்ப வேண்டாம். இடது புறம் அல்லது கால் பாதத்திற்கு கீழ் துப்பட்டும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: அஹ்மது)

மேலும், தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர் கழித்து, தண்ணீரையும் மாசுபடுத்தக்கூடாது. அவ்வாறு செய்தால் நீரின் வழியாகவும் நோய் தொற்று பரவக்கூடும்.

‘ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் உங்களில் எவரும் சிறுநீர் கழித்து விட்டுப் பின்னர் அதில் குளிக்க வேண்டாம் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), புகாரி)

இவ்வாறு வீட்டில் இருக்கும் உணவு பாத்திரம், நீர் பாத்திரம் இவற்றையும் மூடி வைக்க வேண்டும். இதுகுறித்து தூய்மை நடவடிக்கையை துரிதமாக எடுக்கும்படி நபி (ஸல்) அவர்கள் விழிப்புணர்வு செய்கிறார்கள்.

‘நீங்கள் உறங்கப் போகும்போது விளக்குகளை அணைத்து விடுங்கள். கதவு களைத் தாழிட்டு விடுங்கள். தண்ணீர் பைகளைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். உணவையும், பானத்தையும் மூடிவையுங்கள். அதன் மீது ஒரு குச்சியை குறுக்காக வைத்தாவது மூடி வையுங்கள் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), புகாரி)

எல்லாவற்றிலும் சுத்தம் பேணி, சுகாதாரமாக இருந்து, ஆரோக்கியமாக வாழ்வோம்.

மவுலவி அ.செய்யதுஅலி மஸ்லஹி,நெல்லை
Tags:    

Similar News