செய்திகள்
விழா மேடை அமைப்பது குறித்து எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன் போலீசாருடன் பேசிய போது எடுத்த படம்.

கனிமொழி எம்.பி. நாளை குமரிக்கு வருகை- விழா மேடை அமைக்கும் பணி தீவிரம்

Published On 2021-01-16 05:20 GMT   |   Update On 2021-01-16 05:20 GMT
குமரிக்கு நாளை கனிமொழி எம்.பி. வருவதையொட்டி அவர் பங்கேற்க இருக்கும் பொதுக்கூட்டத்துக்கான மேடை அமைக்கும் பணியை போலீசார் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கனிமொழி எம்.பி. நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு குமரி மாவட்டம் வருகிறார். பின்னர் அவர் 18-ந் தேதி குமரி கிழக்கு மாவட்டத்தில் நடைபெறும் மக்கள் கிராமசபைக் கூட்டங்களிலும், அன்று இரவு நாகர்கோவில் நாகராஜா திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசுகிறார். மறுநாள் மேற்கு மாவட்டத்தில் நடைபெறும் மக்கள் கிராம சபை கூட்டங்கள், பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

இதையொட்டி குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள நாகராஜா திடலை சமன் செய்யும் பணியும், மின்விளக்குகள் அமைப்பதற்கான சாரம் அமைக்கும் பணியும் நேற்று தொடங்கியது.

இந்த பணிகளை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரே‌‌ஷ்ராஜன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு கொண்டிருந்தார். அவருடன் மாநகர தி.மு.க. செயலாளர் வக்கீல் மகே‌‌ஷ், நிர்வாகிகள் ஷேக்தாவூது, சாகுல்ஹமீது, பாலா, கார்த்திக் ஆகியோரும் உடன் இருந்தனர்.

அப்போது வடசேரி போலீசார் அனுமதி பெற்ற பிறகுதான் மேடை அமைக்க வேண்டும் என்றனர். அதற்கு பல நாட்களுக்கு முன்பே கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அதிகாரிகளுக்கு மனு கொடு்த்து விட்டோம். இதுவரை பதில் இல்லை. எனவே நாட்கள் இல்லை என்பதால் பணிகளை தொடங்கி உள்ளோம் என்று சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. கூறினார்.

தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் திட்டமிட்டபடி பொதுக்கூட்டம் நடைபெறும். மேடை அமைக்கும் பணியை நிறுத்த மாட்டோம் என்று சுரேஷ்ராஜன் கூறினார். அவர் அங்கிருந்தபடி உயர் அதிகாரிகளிடம் பேசினார்.

தொடர்ந்து அங்கு திடலை சமன் செய்யும் பணியும், மின்விளக்குகள் அமைப்பதற்கான சாரம் அமைக்கும் பணியும் நடந்தது. இதையடுத்து போலீசார் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த பிரச்சனையால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
Tags:    

Similar News