செய்திகள்
உச்ச நீதிமன்றம்

விவசாயிகளின் கடன் தள்ளுபடி வழக்கு - ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Published On 2019-07-20 01:28 GMT   |   Update On 2019-07-20 01:28 GMT
அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களையும் தள்ளுபடி செய்யக்கோரும் வழக்கில், சம்பந்தப்பட்ட ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
புதுடெல்லி:

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனை தள்ளுபடி செய்து தமிழ்நாடு கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத்துறை 2016-ம் ஆண்டு ஜூன் 28-ந் தேதி அரசாணை வெளியிட்டது. அதில், 5 ஏக்கருக்கு குறைவான விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டும் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பி.அய்யாக்கண்ணு பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஏப்ரல் 4-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், “5 ஏக்கருக்கு குறைவாக விவசாய நிலம் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் கடன் தள்ளுபடி சலுகை வழங்குவது என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான செயல். எனவே, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில், 5 ஏக்கருக்கு குறைவான விவசாய நிலம் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் கடன் தள்ளுபடி சலுகை என்பதை நீக்கிவிட்டு, அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் மற்றும் நகைக்கடன் தள்ளுபடி சலுகை வழங்கப்படும் என்பதை குறிப்பிட்டு, அந்த அரசாணையை மாற்றி அமைக்கவேண்டும். இதற்கான உத்தரவை 3 மாதங்களுக்குள் தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்” என்று கூறி இருந்தனர்.



மதுரை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு மதுரை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 3-ந் தேதி உத்தரவிட்டது.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நடராஜ் வாதாடுகையில் கூறியதாவது:-

தமிழகத்தில் சிறு, குறு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வது என்று தமிழக அரசு எடுத்த கொள்கை முடிவின் அடிப்படையில், ஏற்கனவே ரூ.5,780 கோடி ரூபாய் அளவுக்கு விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன. மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பின்படி பெரும் விவசாயிகள் கடனை ரத்து செய்ய வேண்டும் என்றால், தமிழக அரசுக்கு மேலும் ரூ.1,980 கோடி செலவு ஆகும்.

இது தொடர்பாக ஏற்கனவே தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து உள்ளது. அதையே 2016-ம் ஆண்டு ஜூன் 28-ந் தேதி பிறப்பித்த அரசாணையில் கூறி உள்ளது. அரசின் கொள்கை முடிவில் கோர்ட்டு தலையிட முடியாது என்று பல தீர்ப்புகளில் வரையறுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள், இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணை அமைச்சரவை முடிவின் படி எடுக்கப்பட்டதா? அல்லது அரசு தன்னிச்சையாக எடுத்த முடிவா? என்பது குறித்த ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வருகிற ஆகஸ்டு 7-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Tags:    

Similar News