லைஃப்ஸ்டைல்

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ஆரோக்கியமானதா?

Published On 2019-05-17 04:04 GMT   |   Update On 2019-05-17 04:04 GMT
அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்வதில் பல கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. ஸ்கேன் செய்வது நல்லதா? அந்தக் கதிர்களால் குழந்தைக்குப் பாதிப்பு வருமா? என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
குழந்தையின் வளர்ச்சி பற்றி தெரிந்துகொள்ள எடுக்கப்படும் முதல் பரிசோதனை, ஸ்கேன். அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம், குழந்தையின் வளர்ச்சி, ஆரோக்கியம் ஆகியவை குறித்து துல்லியமாகத் தெரிந்து கொள்ளலாம். ஆனால், ஸ்கேன் செய்வதில் பல கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. ஸ்கேன் செய்வது நல்லதா? அந்தக் கதிர்களால் குழந்தைக்குப் பாதிப்பு வருமா? ஏன் ஸ்கேன் நல்லது என்பதை என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் (Ultrasound Scan)

இந்த ஸ்கேன் மூலம் அல்ட்ராசவுண்ட் ஒலி, கருவில் உள்ள குழந்தை மீது பட்டு எதிரொலிக்கிறது. அந்த எதிரொலியைக் காணொளியாக மாற்றி, குழந்தையின் ஒரு இமேஜ் கிடைக்கிறது. குழந்தை எவ்வளவு வளர்ந்திருக்கிறது, எந்த இடத்தில் இருக்கிறது என்பது போன்ற விஷயங்களை ஸ்கேன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் எதற்காக செய்ய வேண்டும்?

குழந்தையின் இதயத் துடிப்பை தெரிந்துகொள்ள உதவும். கருவில் இருப்பது ஒரு குழந்தையா, இரட்டைக் குழந்தைகளா அல்லது எத்தனை குழந்தைகள் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். Ectopic Pregnancy எனப்படும், கருவிற்கு வெளியில் குழந்தை வளர்வது போன்ற பிரச்சனைகளைக் கண்டுபிடிக்கலாம். உடலுக்குள் ஏதேனும் ரத்த கசிவு ஏற்படுகிறதா எனத் தெரிந்து கொள்ளலாம்.

குழந்தை டவுன் சிண்ட்ரோம் பிரச்னையால் பாதித்து உள்ளதா என்பதைக் கண்டறியலாம். குழந்தையின் பாலினத்தைத் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இந்தியா உட்பட பல நாடுகளில் இது தடை செய்யப்பட்டுள்ளது. குழந்தை எந்த இடத்தில், எந்த நிலையில் உள்ளது என்பதைத் தெளிவாகப் பார்க்கலாம்.

குழந்தையின் அனைத்து உறுப்புகளும் இயல்பாக, ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதைப் பார்க்கலாம். வயிற்றில் உள்ள அமினியாடிக் திரவம் சரியான அளவில் உள்ளதா எனக் கண்டுபிடிக்கலாம். குழந்தை எப்போது பிறக்க வாய்ப்பிருக்கிறது என்பதைக் கூட கண்டுபிடிக்க முடியும். குழந்தையின் அனைத்து உறுப்புகளும் சரியாக வளர்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள உதவும். முக்கியமாக மூளை மற்றும் தண்டுவடம் குறைபாடுகளைக் கண்டறிய உதவும்.

அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் குழந்தைகளையோ தாய்மார்களையோ பாதிப்பதாக இதுவரை ஆதாரங்கள் இல்லை. ஸ்கேனின் போது சிறிய அளவிலான சூடு ஏற்படும். ஆனால், இது எவ்வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது.

ஒரு டிகிரிக்கும் குறைவான வெப்பமே இது உருவாகும். அதுவும் நம் திசுக்களால் எடுத்துக்கொள்ளப்படும். ஒருவேளை வெப்பம் நான்கு டிகிரிக்கு அதிகமானால், பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. சரியான இடங்களில் ஸ்கேன் செய்து கொண்டால், எந்தவித பயமும் இல்லை.

அதிகமான இடங்களில் 2D ஸ்கேன்களே செய்யப்படுகின்றன. இதில், குறைந்த அளவிலான அல்ட்ராசவுண்ட் ஒலி, அதிகமான இடத்தில் பரவலாக சென்று எதிரொலிக்கிறது. அதுமட்டுமில்லாமல், குழந்தையைச் சுற்றி உள்ள நீரில் பெருவாரியான வெப்பம் தணிக்கப்படுகிறது. எனவே பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

3D ஸ்கேன் என்பது சில தனியார் மருத்துவமனைகளில் செய்யப்படுகிறது. இதிலும், 2D ஸ்கேன் சற்று அதிக நேரம் எடுக்கப்பட்டு, முப்பரிமாண படமாகத் தெரிகிறது. எனவே இதுவும் பெரிய பாதிப்பில்லை. ஆனால், 4D ஸ்கேன் என்பதை முதல் ஐந்து மாதங்கள் செய்ய வேண்டாம் என்பது மருத்துவர்களின் கருத்து. காரணம், குழந்தை சிறியதாகவும், அதிகமான அசைவில்லாமலும் இருப்பதால், வெப்பம் உடனடியாகத் தாக்கக்கூடும்.

மருத்துவர் பரிந்துரைக்காமல், தாங்களாகவே ஸ்கேன் செய்ய கூடாது. தேவையற்ற கதிர்வீச்சுகள் கர்ப்பிணிகள் மீதும் குழந்தையின் மீதும் படுவதைத் தவிர்க்க வேண்டும்.

டாப்லர் ஸ்கேன்களும் முடிந்தவரைத் தவிர்க்கலாம். குழந்தைக்கு ஆக்சிஜன் (மூச்சுக் காற்று) சரியாகச் செல்கிறதா என்றும், தொப்புள்கொடி வேலை செய்கிறதா என்றும் பார்க்கவே இவ்வகை ஸ்கேன் செய்யப்படுகிறது. மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தாராளமாகச் செய்யலாம்.
Tags:    

Similar News