செய்திகள்
கோப்புபடம்

இன்னும் 2 வாரத்தில் 3-வது அலை தாக்கலாம் - மராட்டிய நிபுணர் குழு எச்சரிக்கை

Published On 2021-06-18 06:47 GMT   |   Update On 2021-06-18 06:47 GMT
மராட்டியத்தில் இன்னும் 2 அல்லது 4 வாரத்திற்குள் கொரோனா 3-வது அலை தாக்கும். 2-வது அலையை விட இரண்டு மடங்கு அதிகம்பேர் இதில் பாதிக்கப்படுவார்கள்.

மும்பை:

நாட்டிலேயே கொரோனா பாதிப்பு மராட்டிய மாநிலத்தில்தான் மிக மோசமாக இருந்தது. தற்போது அங்கு 2-வது அலை பாதிப்பு குறைந்து வருகிறது.

ஆனாலும் கூட 3-வது அலை தாக்குதல் ஏற்படலாம் என கருதுவதால் இது சம்பந்தமாக முதல்-மந்திரி உத்தவ்தாக்கரே மராட்டிய மாநில மருத்துவ கட்டுப்பாட்டு குழுவினருடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது கட்டுப்பாட்டு குழுவினர் சில அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவித்தனர். மராட்டியத்தில் இன்னும் 2 அல்லது 4 வாரத்திற்குள் கொரோனா 3-வது அலை தாக்கும். 2-வது அலையை விட இரண்டு மடங்கு அதிகம்பேர் இதில் பாதிக்கப்படுவார்கள். எனவே முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை விரிவாக மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்கள்.

மராட்டிய மாநிலத்தில் 2-வது அலை உச்சத்தில் இருந்தபோது அதிகபட்சமாக 8 லட்சம் பேர் ஒரே நேரத்தில் தாக்குதலுக்கு ஆளாகி சிகிச்சையில் இருந்தார்கள். தற்போது அங்கு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 40 ஆயிரமாக குறைந்துள்ளது.

2-வது அலையில் மட்டும் மராட்டியத்தில் 40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். முதல் அலையில் 19 லட்சம் பாதிக்கப்பட்டனர். தற்போது 3-வது அலை 2-வது அலையை விட இரு மடங்கு அதிகமாக இருக்கும் என்பதால் 80 லட்சம் பேருக்கு மேல் பாதிப்பை சந்திக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3-வது அலையில்10 சதவீதத்துக்கு மேல் சிறுவர்கள் மற்றும் சிறுவயது இளைஞர்கள் பாதிக்கப்படலாம் என்றும் நிபுணர்கள் கூறினார்கள்.

இங்கிலாந்தில் ஏற்கனவே 3-வது அலை தாக்கி விட்டது. 2-வது அலை முடிவுக்கு வந்து 4 வாரத்திலேயே 3-வது அலை தாக்கியது. அதே சூழ்நிலைதான் தற்போது மராட்டியத்தில் நிலவுவதால் 4 வாரத்திற்குள் 3-வது அலை தாக்கும் என்று மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.

ஆனால் அதே நேரத்தில் பெரும்பாலான மக்களுக்கு நோய் ஏற்பட்டு எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பதால் உடலில் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாது என்றும் நிபுணர் குழுவினர் கூறினர்.

Tags:    

Similar News