செய்திகள்

முழுநேர அரசியலில் ஈடுபடுவேன் - கமல்ஹாசன் பேட்டி

Published On 2018-08-21 09:46 GMT   |   Update On 2018-08-21 09:46 GMT
முழுநேர அரசியலுக்கு வர ஈடுபடுவேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். #MakkalNeedhiMaiam #KamalHaasan

சென்னை:

கமல்ஹாசன் தன் மகள் சுருதிஹாசனுடன் கடந்த வாரம் நியூயார்க் சென்றார் அங்கு இந்தியாவின் சுதந்திர தினம் ஆகஸ்ட் 15-ந்தேதி கொண்டாடப்பட்டது.

நேற்று இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சி நியூயார்க்கின் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.

மாடிசன் அவென்யூவில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஒன்று கூடி அணிவகுப்பில் பங்கேற்றனர். அதில் இந்திய பாரம்பரிய இசை மற்றும் நடனம் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் மார்‌ஷலாக நடிகர் கமல்ஹாசன் கவுரவிக்கப்பட்டார். இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து பங்கேற்றார்.

அவருடன் நடிகை சுருதிஹாசன், நடிகை பூஜா குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். இவர்களுடன் மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விவியன் ரிச்சர்ட்சும் கலந்துகொண்டார்.

கமல்ஹாசன் நிகழ்ச்சியில் பேசியபோது , “எங்களது நாட்டின் சார்பில் இங்கு கலந்துகொள்வதில் பெருமைப்படுகிறேன். 60 ஆண்டுகாலமாக மக்கள் எனக்கு ஒரு நடிகனாக தங்களது ஆதரவை கொடுத்தார்கள். அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமே என்றுதான் அரசியலுக்குள் நுழைந்துள்ளேன்.

ஒரே நேரத்தில் சினிமாவையும் அரசியலையும் பார்ப்பது என்பது சிரமம் என புரிகிறது. எனவே சினிமாவை விட்டுவிட்டு முழுநேர அரசியலுக்கு வர விரும்புகிறேன்.


இனி எனது கவனம் முழுக்க அரசியலில் தான் இருக்கும். மக்கள் நலன் எனும் ஒரு குடையின் கீழ் பணி செய்யும் தொண்டர்கள் அங்கிருக்கிறார்கள். இங்கிருந்து நான் செல்வதும் மக்கள் பணி நோக்கித்தான். நமது கேரளம் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உடனே செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்துக்கு கமல்ஹாசன் ரூ.25 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார். அதுதவிர தனது மக்கள் நீதி மய்ய தொண்டர்களையும் நிதி உதவி மற்றும் நிவாரண பொருட்களை அளிக்க கேட்டுள்ளார்.

கேரள முதல் அமைச்சர் பினராயி விஜயனுடன் கமல் நெருக்கமாக உள்ளார். கமல் அரசியலில் இறங்கிய போது அவரிடம் தான் ஆலோசனை கேட்டார் என்பது குறிப் பிடத்தக்கது.

Tags:    

Similar News